சசிகலா வழக்கு - ஆக.25-க்குள் குற்றப்பத்திரிகை

சிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், வரும் 25-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என, ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா வழக்கு - ஆக.25-க்குள் குற்றப்பத்திரிகை

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, சிறையில் சொகுசு வசதிகளுக்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்க கோரி, தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், குறிப் பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், மேலும் சில மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மனுதாரர் கீதா மற்றும் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தரப் பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் கால தாமதம் ஏற்பட்டால் இந்த வழக்கை உடனே சி. பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சசிகலா மீதான லஞ்ச புகார் குறித்த குற்றப்பத்திரிகையை குறிப் பிட்ட நாட்களுக்குள் தாக்கல் செய்தே ஆக வேண்டும் என்றும், அதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதன்படி வரும் 25-ம் தேதிக்குள் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும் என கூறி, அன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.