உ.பியில் புதைக்கப்பட்ட உடல்களின் மேல் சுற்றப்பட்ட காவித்துணி அகற்றம்: யோகி ஆதித்யநாத் மீது கடும் விமர்சனம் வைக்கும் எதிர்கட்சிகள்....

உ.பியில்  புதைக்கப்பட்ட உடல்களின் மேல் சுற்றப்பட்ட காவித்துணி அகற்றம்: யோகி ஆதித்யநாத் மீது கடும் விமர்சனம் வைக்கும் எதிர்கட்சிகள்....
கங்கை கரையில் புதைக்கப்பட்ட உடல்களின் மேல் சுற்றப்பட்ட காவித்துணி அகற்றப்பட்ட விவகாரம் குறித்து  யோகி ஆதித்யநாத் அரசு மீது எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உத்திரபிரதேசத்தில் கொரோனா பலிகள் அதிகமானதால் இறுதி சடங்குகளை உறவினர்களால் முறையாக செய்ய முடியவில்லை. இதனால், சடலங்களை கங்கை நதியில் வீசுவதும், அதன் கரைகளில் புதைப்பதும் நடைபெற்றன.
இந்த செய்திகள் வெளியாகி சர்ச்சையானதால், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் அதுபோன்ற செயல்கள் தடுக்கப்படுகிறது. இவை வாரணாசி, அலகாபாத், கான்பூர், உன்னாவ் மற்றும் பலியா ஆகிய நகரங்களின் கங்கை கரைகளில் அதிகமாகப் புதைக்கப்பட்டன.இதனைத் தடுக்க பீகார் அரசு மீன்களை வலை வீசிப் பிடிப்பது போல் பிணங்களையும் பிடிக்க பெரிய வலையை உ.பி.-பீகார் எல்லையில் கங்கை நதியில் விரித்தது.
ஓரிரு அடிகள் ஆழத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள் சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் வீசியக் காற்றாலும் வெளியில் தெரியத் துவங்கின. இதை மறைக்க, அந்த உடல்களில் சுற்றப்பட்டக் காவி அல்லது மஞ்சள் நிறத்துணிகளை அகற்ற பணியாளர்களை அம்மாவட்ட நகராட்சிகள் அமர்த்தியுள்ளனர். இவர்கள் புதைக்கப்பட்டவர்களின் தலைப்பகுதியில் அடையாளத்திற்கு வைக்கப்படும் மூங்கில்களையும் பிடுங்குகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் செய்யப்படும் இதன் படக்காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உடலில் சுற்றப்படும் துணிகளில் ராம் ராம் என்ற எழுத்துக்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதை குறிப்பிட்டு முதல்வர் யோகியை உ.பி.யின் எதிர்கட்சிகள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதியை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்கள் மீது ஊரடங்கை மீறியதாக தொற்று சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த போராட்டம் உ.பி.யின் வேறு சில நகரங்களிலும் தொடர்கிறது.