"எம்.பி. பி.எஸ் மத்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப சட்ட நடவடிக்கை" அமைச்சர் மா.சு. அறிவிப்பு!

"எம்.பி. பி.எஸ் மத்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப சட்ட நடவடிக்கை" அமைச்சர் மா.சு. அறிவிப்பு!

மருத்துவ படிப்பில் மத்திய ஒதுக்கீட்டினால் நிரப்பப்படாத இடங்களை நிரப்ப உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளியில் ரோட்டரி கிளப் மற்றும் அப்போலோ மருத்துவமனை சார்பில் உலக இதய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் மற்றும் காவல்துறை அதிகாரி சமை சிங்க் மீனு ஆகியோர் வருகை தந்திருந்தனர். மேலும் நிகழ்வில்  மக்கள் சிவப்பு வண்ண ஆடை உடுத்தி இதய வடிவில் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, இதயம் காப்போம் என்ற திட்டத்தில் அனைத்து ஆரம்ப பொது சுகாதார நிலையங்களிலும் துணை பொது சுகாதார நிலையங்களிலும் லோடிங் டோசஸ் எனப்படும் 14 மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த மூன்று மாதத்தில் தமிழ்நாட்டில்  மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். நான் கள ஆய்வு மேற்கொள்ளும் போதெல்லாம் இதன் மூலம் பயனடைந்தவர்களின் பட்டியல் வாங்கி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறேன். இத்திட்டத்தின் மூலம் நாங்கள் உயிர் பிழைத்து இருக்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள்" என தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பில் 85 சதவீத ஒதுக்கீடு மாநில அரசும் 15 சதவீத ஒதுக்கீடு ஒன்றிய அரசும் செய்ய வேண்டும். மாநில அரசில் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நடைமுறையால்  கடந்த ஆண்டு 6 இடங்கள் நிரப்பப்படாமலே விடப்பட்டள்ளன. அதைப்போல இந்த ஆண்டும் மத்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் காலியாக உள்ளன. 

முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி ஒன்றிய அரசுக்கும் என்.எம்.சி நிர்வாகத்திற்கும் கடிதங்களை அனுப்பி இருக்கிறோம். காலியிடங்களை நிரப்ப வேண்டும் அல்லது காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என கேட்டுள்ளோம். அப்படி சொல்லியும் கூட இன்னும் இடங்கள் நிரப்பப்பட்டவில்லை. ஸ்டான்லி போன்ற மிக பெரிய மருத்துவமனையில் கூட 2 இடங்கள் காலியாக உள்ளன என்பது வருத்தத்திற்குரியது. முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி நாளையோ நாளை மறுநாளோ சட்டரீதியாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர இருக்கிறோம் அதன் பிறகாவது காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" எனக் கூறினார்.