மக்களைவயில் இன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல்!

மக்களைவயில் இன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல்!

நாடாளுமன்ற மக்களவையில் இன்று பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சகங்களின் மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதலாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களுக்கு இழைக்கபட்ட அநீதி தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மேற்கு வங்கம் மற்றும் இராஜஸ்தான் பகுதியிலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பாஜவினர் அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பல மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களுக்கான மசோதா, திரைப்படங்களை அனுமதியின்றி வெளியிடும் திருட்டை தடுப்பதற்கான மசோதா, கிரிமினல் குற்றங்களாக கருதப்படும் பல சிறிய விதி மீறல்களை அபராதத்துடன் முடித்துக் கொள்வதற்கான "ஜன் விசுவாச" மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன. 

இந்த நிலையில், இன்று கூடவுள்ள நாடாளுமன்ற மக்களவையில் பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிடவற்றில் மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராணுவத்தின் உட்கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வரும் மசோதாவை அமைச்சர் ராஜ்நாத்சிங் தாக்கல் செய்யவுள்ளார். 

அதேபோல் ஐஐஎம் குறித்த மசோதா ஒன்றை கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தாக்கல் செய்யவுள்ளார். சுகாதாரத்துறையில் மருந்தகங்கள் குறித்த மசோதா ஒன்றை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும், டிஜிட்டல் தகவல்கள் சேமிப்பு பாதுகாப்பு குறித்த மசோதாவை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது. 

மறுபுறம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபடவும் வாய்ப்புள்ளதால் நாடாளுமன்றம் முடங்கலாம் என்றும் எதிப்ராக்கப்படுகிறது.