ம.பி, சத்தீஸ்கா்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

சத்தீஸ்கா் மாநில 2-ம் கட்ட தோ்தல் மற்றும் மத்திய பிரதேச மாநில தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கவுள்ளது. 

தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பா் மாதம் 7-ம் தொடங்கி 30-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 5 மாநிலங்களிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் நவம்பா் 7-ம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 13-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதுவரை அங்கு 174 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த வேட்பு மனுக்கள் இன்று பரிசீலிக்கப்படுகின்றன. 

இதேபோல் சத்தீஸ்கர் மாநில முதல் கட்ட தோ்தலுக்கான நவம்பா் 7-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த வேட்பு மனுக்கள் இன்று பரிசீலிக்கப்படுகின்றன. தொடா்ந்து 2-ம் கட்ட தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வரும் 30-ம் தேதி கடைசி நாளாகும். 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பா் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி, 30-ம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற நவம்பா் 2-ம் தேதி கடைசி நாளாகும். இதேபோல் ராஜஸ்தானில் வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதியும், தெலங்கானாவில் நவம்பா் 3-ம் தேதியும் நடைபெறவுள்ளது.