கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் குட்டையில் குதித்து தற்கொலை செய்துகொண்ட கொடுமை...

கர்நாடகா மாநிலத்தில் கடன் தொல்லை காரணமாக குட்டையில் குதித்து 4 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் குட்டையில் குதித்து தற்கொலை செய்துகொண்ட கொடுமை...

கர்நாடகா மாநிலம் யாதகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திம்மராயா - சாந்தம்மா தம்பதி.  இவர்களுக்கு சுமித்ரா, ஸ்ரீதேவி, லட்சுமி என்ற 3 மகள்களும் சிவராஜ் என்ற மகனும் இருந்தனர். விவசாயம் செய்து வந்த திம்மராயா, பயிர் சாகுபடிக்காக வங்கி மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

விவசாயத்தில் போதிய லாபம் கிடைக்காததால் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் நண்பர்களும் கடன் தொகையை திருப்பி செலுத்த நெருக்கடி கொடுத்து வந்ததால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.  
 
இந்த நிலையில் நேற்று மாலை அவர் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் தோரணஹள்ளி பகுதியில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லை மட்டுமே காரணமா அல்லது வேறு காரணம் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.