எதிர்கட்சிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 முக்கிய தீர்மானங்கள்!

எதிர்கட்சிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 முக்கிய தீர்மானங்கள்!

பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைவது உள்ளிட்ட 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில்  பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில்  நடைபெற்றது.

இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 5 மாநில முதலமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, சரத்பவார், சீத்தாராம் யெச்சூரி  உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 16 முக்கிய எதிர்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாசிச பாஜக அரசை முடிவுக்கு கொண்டு வருவோம் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தை காக்க, வேறுபாடுகளை களைந்து எதிர்கட்சியினர் ஓர் அணியில் திரள வேண்டுமென குறிப்பிட்டார். மேலும், ஆட்சி அதிகாரத்தில் பாஜக அல்லாத மாநில அரசுகள் பழிவாங்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.  

ராகுல்காந்தி தனது உரையின்போது, சீட் பங்கீட்டில் குறிப்பிடத் தகுந்த தளர்வை வழங்கி நாட்டிற்காக எவ்விதத் தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மாலை 4 மணிக்கு  நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் பாஜகவை வீழத்துவதற்காக வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாஜகவுக்கு  எதிராக அனைத்து  எதிர்கட்சிகளும் ஒன்றிணைவது, தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் பொதுசெயல் திட்டத்தை அடுத்த கூட்டத்தில் அறிமுகப்படுத்துவது, மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைப்பது என 3 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாக கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மதசார்பற்ற கட்சி தலைவர்கள் கூட்டாக அறிவித்தனர்.

முன்னதாக கூட்டத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னாவில் இருந்து சென்னை புறப்பட்டார்.

இதையும் படிக்க:மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி - மயக்கம்! 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!!