பாஜகவின் புதுவியூகம்...மத்திய அமைச்சரவையில் மாற்றமா?

பாஜகவின் புதுவியூகம்...மத்திய அமைச்சரவையில் மாற்றமா?

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு முன்பாக, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யவும், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கட்சி அமைப்பிலும் முக்கிய மாற்றங்கள் செய்யவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி கடந்த 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் கட்சி அமைப்பு மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

இதையும் படிக்க : மேகதாது விவகாரம்; முதலமைச்சருடன் இன்று ஆலோசனை...!

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் டெல்லியில் பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால் அதற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.