திருப்பதி : இலவச தரிசன டோக்கன் வினியோகம் மீண்டும் துவக்கம்...!

திருப்பதி : இலவச தரிசன டோக்கன் வினியோகம் மீண்டும் துவக்கம்...!

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இலவசமாக ஏழுமலையானை வழிபட டோக்கன்களை விநியோகம் செய்யும் பணி ஆறு மாதத்திற்கு பின் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் இன்று மீண்டும் துவங்கியது. 

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி திருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன் விநியோக கவுண்டர்களில் பக்தர்களிடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்போது முதல் இலவச தரிசன டோக்கன் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் திருப்பதி மலைக்கு நேரடியாக சென்று இலவசமாக ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இதனால் பக்தர்கள் திருப்பதி மலைக்கு சென்று வரிசையில் காத்திருந்து இலவசமாக ஏழுமலையானை வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணியை தேவஸ்தான நிர்வாகம் இன்று முதல் துவக்கியுள்ளது. திருப்பதியில் உள்ள பூதேவி கட்டிட வளாகம், விஷ்ணு நிவாஸம் கட்டிட வளாகம், இரண்டாவது சத்திரம் ஆகியவற்றில் தலா 10 கவுண்டர்கள் வீதம் 30 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு பக்கர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் துவங்கி உள்ளது. எனவே நேற்று இரவு முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து டோக்கன்களை வாங்கி செல்கின்றனர்.

சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தலா 25 ஆயிரம் டோக்கன்களும் வாரத்தின் மற்ற நாட்களில் தலா 15,000 டோக்கன்களும் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து டோக்கன்களை வாங்கி செல்கின்றனர். ஒரு முறை ஆதார் அட்டையை சமர்ப்பித்து டோக்கன் பெரும் பக்தர் மீண்டும் 30 நாட்களுக்கு பின் மட்டுமே இந்த வசதியை பெற முடியும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை முதல் அன்றைய தினம் தரிசனம் செய்வதற்கு உரிய டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் டோக்கன்கள் கிடைக்காத பக்தர்கள் நேரடியாக திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையானை இலவசமாக வழிபடலாம் என்றும் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : சுகாதாரத்துறை வரவேற்புடன் பெங்களூரு வந்தடைந்த சூப்பர் ஸ்டார்...