இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து தீவிரம்..! காசா பகுதியில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியது இஸ்ரேல்..!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போா் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 450 ஆக உயா்ந்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதில் இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 450 ஆக அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 200 ஆகவும் உயர்ந்துள்ளது. எனினும் தொடர்ந்து இருதரப்பினரும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாகவும், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காசா போரின் முதல் வாரத்தில் 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் போர் தொடங்கிய உடன் காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது. இதன் காரணமாக காசா பகுதி மக்கள் குடிநீர், உணவு இன்றி பரிதவித்து வந்தனர். இதற்கிடையே தெற்கு காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் வண்டிகளிடம் முண்டி அடித்துக்கொண்டு நீர் பிடித்துச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதற்கிடையே போர் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 330 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அவர்களில் 190 பேர் ஹமாஸ் படையினருடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு கரையில் இஸ்ரேல் படைகள் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படும் நிலையில், இதுவரை 55 மேற்கு கரை பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.