ககன்யான் திட்டம் : முதலாவது சோதனை விண்கலம் எப்போது அனுப்பப்படுகிறது..? மத்திய அமைச்சர் தகவல்..!

ககன்யான் திட்டம் : முதலாவது சோதனை விண்கலம் எப்போது அனுப்பப்படுகிறது..?  மத்திய அமைச்சர் தகவல்..!

ககன்யான் திட்டத்தின் கீழ் வீரர்களை எப்போது விண்வெளிக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த புதிய தகவலை  மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்றான ககன்யான் திட்டம் என்பது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதாகும். மூன்று மனிதர்கள் கொண்ட குழுவை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்புவதே அதன் நோக்கமாகும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக முதலாவது சோதனை விண்கலம் இந்த ஆண்டு விண்வெளிக்கு செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார். 

டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்தார். ககன்யான் திட்டம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், கொரோனா காரணமாக ககன்யான் திட்ட நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும், முதலில் ஆளில்லா விண்கலமும், தொடர்ந்து வயோம் மித்ரா என்ற ரோபோவும் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பி வைப்பதற்காக 4 போர் விமானிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 2 சோதனைப் பயணங்களின் முடிவை ஆராய்ந்து, அதன் பின்னர் 2 வீரர்கள் 2024-ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.