Youtube - ஐ பார்த்து படித்து மாவட்டத்தில் முதலிடம் ...!  சாதனை படைத்த கூலித்தொழிலாளியின் மகன்....! 

Youtube - ஐ பார்த்து படித்து மாவட்டத்தில் முதலிடம் ...!  சாதனை படைத்த கூலித்தொழிலாளியின் மகன்....! 

யூடியூபில் மட்டுமே பாடம் படித்து புதுக்கோட்டையை சேர்ந்த மாணவன் நீட்  தேர்வில் வெற்றி பெற்று தனது மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தங்கமணி தம்பதியினரின் மகன் அறிவு நிதி. இவர், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 525 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவனாவார். 

தனது  அப்பா மற்றும் அம்மா இருவரும் கூலித்தொழில் வேலைக்கு சென்று வருவதால், புத்தகம் கூட வாங்கி படிக்க முடியாத சூழ்நிலையில் தவித்து வந்த மாணவன் சமூக வலைதளமான  யூடியூபில் ' நீட் ' தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது  என்பது  பற்றி 11-ஆம் வகுப்பிலிருந்து ஆர்வம் கொண்டு பார்த்து வந்துள்ளார்.

இவர், தனது தீவிரமான ஆர்வத்தால் முழு முனைப்போடு யூடியூபில் உயிரியல் பாடம் படித்து தற்போது 348 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாக  தனது முதல் முயற்சியிலேயே  வெற்றி பெற்றுள்ளார்.

புத்தகம் வாங்க கூட காசு இல்லை என்று காரணம் காட்டாமல் தனது பெற்றோர்களின் நிலையையும் அறிந்து, முயற்சியும் பயிற்சியுமிருந்தால் கடினமான தேர்வை கூட வென்று விடலாம் என்று நிரூபிக்கும் வகையில்,   யூட்யூபில் பாடம் படித்து வெற்றி பெற்றுள்ள மாணவனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவரது தந்தை பேசுகையில் என் பிள்ளை நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது படிப்புக்கு உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இது பற்றி அந்த மாணவனிடம் பேசுகையில் தான்  பயாலஜி மட்டும்  படித்து வெற்றி பெற்றுள்ளதாகவும்,  முறையான வழிகாட்டுதல் இல்லாததால் இயற்பியல் மற்றும் வேதியல் படங்களில் அதிக மதிப்பெண் எடுக்கமுடியவில்லை எனவும், எல்லா பாடங்களிலும் கவனம் செலுத்துமாறு அனைத்து மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

தன் தந்தை மற்றும் தாயாரின் கனவை நிறைவேற்றிய அறிவுநிதிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
 இதையும் படிக்க   | தமிழகத்தில் முதன்முதலாக வணிகத்தை தொடங்கியுள்ள ' லூலூ ' நிறுவனம்..! புதிதாக திறக்கப்பட்ட 'லூலூ மால் '..! எங்கு தெரியுமா...?