விருதுநகர்: குடிநீருடன் கழிவு நீர் கலப்பு...! நடவடிக்கை எடுக்குமா அரசு..?

விருதுநகர்:  குடிநீருடன் கழிவு நீர் கலப்பு...! நடவடிக்கை எடுக்குமா அரசு..?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது சுந்தரபாண்டியம் பேரூராட்சி .இந்த பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது.

இந்த பேரூராட்சியின் தலைவியாக ராஜம்மாள் உள்ளார். சுந்தரபாண்டியம் பேரூராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை தாமிரபரணி தண்ணீரும், இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை பேரூராட்சி சார்பில் குடிநீரும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த  ஒரு மாதத்திற்கு மேலாக பேரூராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக 8 வது வார்டு புதுப்பாளையம் தெருவிற்கு விநியோகிக்கப்படும் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து நுரை நுரையா வருவதாகவும், இதை குடித்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உள்ளதாகவும் , உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், எந்த  பகுதியிலிருந்து  சாக்கடை நீர்  கலக்கிறது என்பது  தெரியவில்லை என பேரூராட்சி  நிர்வாகம் மழுப்பலான பதில் தெரிவிப்பதாக  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உடனே குடிநீரில் சாக்கடை நீர் எவ்வாறு கலக்கிறது? என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க   | குடிநீர் கேட்டு காங்கிரஸ் எம்எல்ஏவை முற்றுகையிட்ட பெண்கள்..!