ஒசூர் தொழில்நுட்ப பூங்கா; நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு; வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றம்!

ஒசூர் தொழில்நுட்ப பூங்கா; நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு; வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றம்!

ஒசூர் அருகே தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க ஒரு கிராமம் உட்பட 1000 ஏக்கர்கள் நிலம் கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து வீடுகள் தோறும் கருப்புக்கொடிகளை கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சென்னசந்திரம் ஊராட்சியில் உள்ள 5 கிராமங்களில் நில உச்ச வரம்பு சட்டம் அமல்படுத்திய பிறகு 2500 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்காமல் இருந்து வருகிறது.

பட்டா இல்லாத இந்த நிலங்களை பைமாசி நிலம் என அழைக்கும் நிலையில் 2018ம் ஆண்டு பைமாசி நிலத்திற்கு பட்டா வழங்கிட தனி DRO மூலம் நிலவரித்திட்டம் என்கிற துறையை உருவாக்கி 3 தாசில்தார்கள் மூலம் பட்டா வழங்க ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது.

நிலையில் தமிழக அரசு உளியாளம் கிராம குடியிருப்புக்கள் உட்பட 1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது

பல தலைமுறைகளாக வீடுகள் கட்டி, விவசாயம் செய்து வரும் நபர்களுக்கு பட்டா இல்லை என்பதாலும், ஐடி பார்க் ஒட்டிய நிலம் என்பதாலும் அரசு இப்பகுதியில் புதிய டெக் பார்க் அமைக்க திட்டமிட்டுள்ளது. பைமாசி நிலத்திற்கு அரசு சார்பில் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது அரசின் நோக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உளியாளம் கிராம மக்கள் கிராமத்தில் உள்ள வீடு, நிலங்களுக்கு பட்டா கேட்டும், தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் கிராம மக்கள் வீடுகள் தோறும் கருப்பு கொடிகளை கட்டி உள்ளனர்.

இதுக்குறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட விவசாயிகள் பேசுகையில், பட்டா வழங்க எங்களிடம் ஆவணங்களை பெற்ற அதிகாரிகள் தற்போது எங்களை காலி செய்ய கூறுவது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பினர். மேலும் அரசு எங்களுக்கான நிலம், வீடுகளுக்கு பட்டா வழங்கவில்லை என்றால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் அரசு ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக கூறி உள்ளனர்.

இதையும் படிக்க:கொப்பரை தேங்காய்; கிலோ ரூ.140 வழங்க விவசாயிகள் கோரிக்கை!