கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ; சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்...!

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ; சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்...!

கர்நாடக மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருந்து வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையும் தனது முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு துறைமுகத்தின் வழியே கடலில் கலந்து வருகிறது. 

கடந்த ஜூலை மாதம் தொடங்கி தற்போது வரை அடுத்தடுத்து 4 முறை வெள்ளநீர் 2 லட்சம் கனஅடிக்கு மேல் திறக்கப்பட்டது. இந்நிலையில் 5 வது முறையாக வெள்ளநீர் திறக்கப்பட்ட போதே கொள்ளிடம்  ஆற்றின் கரையில் அமைந்துள்ள வடிகால் கதவணைகள் பழுதடைந்து அதன் வழியே ஆற்றின் மறுபுறம் வெள்ளநீர் உட்புகுந்தது. இதனால் கொள்ளிட கரையோர கிராமங்களான நாணல்படுகை, ஆச்சாள்புரம், அளக்குடி, முதலைமேடு, காட்டூர்,வெட்டாத்தாங்கரை,புளியந்துறை உள்ளிட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் சம்பா பயிர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெள்ள நீரில் மூழ்கியதால் அழுகியது. 

விளைநிலங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் வெள்ள நீர் ஒருபுறம் சூழ்ந்த நிலையில் பாசன ஆறு மற்றும் வாய்க்கால்களில் அதிகப்படியான தண்ணீர் வந்ததால் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள், தற்போது அனைத்து பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால்  அரசு உரிய கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், கொள்ளிடம் ஆற்றின் கரையை சீரமைத்து, கதவணைகளை புதுப்பிக்கவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க : மீனவர் பிரச்சினை...அமெரிக்கத் தூதர் யாழ்ப்பாணம் வந்தார்!