தமிழகம் முழுவதும் மனைகளுக்கு குறைந்த பட்ச வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்!

தமிழகம் முழுவதும் மனைகளுக்கு குறைந்த பட்ச வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்!

தமிழகம் முழுவதும் விவசாய நிலம் மற்றும் மனை நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வழிகாட்டி மதிப்புகள், விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுர அடியிலும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிக மிக குறைவாக உள்ளன. வங்கிகள், வழிகாட்டி மதிப்பையொட்டியே கடன் வழங்கும். இதனால், மனை நிலம் வாங்குபவர்கள் வங்கிகளில் தேவையான அளவிற்கு கடன் பெற முடியாத நிலை உள்ளது.

இதை தவிர்ப்பதற்காகவும், வழிகாட்டியில் குறைந்தபட்ச மதிப்பை நிர்ணயம் செய்வதற்காகவும் 16-8-2023 அன்று மைய மதிப்பீட்டுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களின் விரிவான விவாதத்திற்கு பின் சொத்து அமைந்துள்ள பகுதிகளைப் பொருத்து குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன்படி, சென்னை மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சியில் குறைந்தபட்ச குடியிருப்பு மதிப்பு சதுர அடிக்கு ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. இதர மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும், அந்த மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு - சதுர அடி ரூ.50; குறைந்தபட்ச விவசாய மதிப்பு - ஏக்கருக்கு ரூ.2 லட்சம். இந்த குறைந்தபட்ச நிர்ணயிக்கப்பட்ட மதிப்புகள், இணையதளத்தில் நேரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பிற்கு கீழ் வேறு மதிப்புகள் எதும் உள்ளனவா? என்பதை சரிபார்த்துக்கொள்ள சம்பந்தப்பட்ட துணைப்பதிவுத்துறை தலைவர்கள், நிர்வாக மற்றும் தணிக்கை மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் சார் பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இன்று இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி!