குழந்தை திருமணம் தொடர்பான விசாரணை...! தீட்சிதர்கள் சாலை மறியல் போராட்டம்...!

குழந்தை திருமணம் தொடர்பான விசாரணை...! தீட்சிதர்கள் சாலை மறியல் போராட்டம்...!

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கோயில் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் பூஜை செய்து வருகின்றனர். அவர்கள் குழந்தை திருமணம் செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சமீபத்தில் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சில தீட்சிதர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் மற்றும் இரண்டு பேரை கடலூர் மாவட்ட சிறப்பு படைப்பிரிவு போலீசார் விசாரணைக்காக சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு அழைத்துச் சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த மற்ற தீட்சிதர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென கீழவீதியில் உள்ள கோயில் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

பின்னர் போலீசாருக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட சில தீட்சிதர்களை போலீசார் கைது செய்னர். இதைத் தொடர்ந்து மற்ற தீட்சிதர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், அவர்கள் கோயில் எதிரில் உள்ள கீழசன்னதியில் நின்றபடி போலீசாரிடம் நியாயம் கேட்டனர். அவர்களிடம் கடலூர் மாவட்ட கூடுதல் எஸ்பி அசோக்குமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.