கோவில் அன்னதானம் எனக் கூறி, அரிசி மூட்டைகளை திருடிய மர்ம ஆசாமி!

கோவில் அன்னதானம் எனக் கூறி, அரிசி மூட்டைகளை திருடிய மர்ம ஆசாமி!

திருப்பத்தூர் அருகே, அரசி கடை ஒன்றில், மிகவும் சாமர்த்தியமாக 6 மூட்டை அரிசியை திருடிச் சென்றுள்ளார், மர்ம ஆசாமி ஒருவர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் ரோடு சுண்ணாம்புக்காரர் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் பாரி (45). இவர் அதே பகுதியில் என்.ஏ.பி. டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசி கடை நடத்தி வருகிறார். தற்போதைய தொழில்நுட்ப உலகில் போட்டி போடும் விதமாக, அரிசி வியாபாரத்தை ஆன்லைன் மூலமாகவும் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதியன்று அப்துல்பாரியை போனில் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். மறுமுனையில் பேசியவர் ஆம்பூர் ரெட்டித் தோப்பு பகுதியில் உள்ள அரசமர முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், கோயிலில் நடைபெற உள்ள அன்னதானத்துக்கு 10 மூட்டை அரிசி வேண்டுமென்று கேட்க, அப்துல் பாரியம் அவர் கூறிய இடத்திற்கு, தனது இருசக்கர வாகனத்தில் 6 மூட்டைகளை எடுத்துச் சென்றுள்ளார். பின்னர், மீதமுள்ள 4 மூட்டைகளை எடுத்து வரச்சென்ற இடைவேளையில், 6 மூட்டைகளோடு ஆட்டோவில் தப்பியுள்ளார் அந்த நபர்.

பின்பு மீண்டும் வந்து பார்த்த அப்துல் பாரி, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார். கோயில் பெயரைச் சொல்லி திருட்டு வேலையில் ஈடுபட்ட ஆசாமியால், தன்னைப் போல வேறு எந்த வியாபாரியும் பாதிக்கப்படக்கூடாது என முடிவெடுத்த அப்துல்பாரி இதுகுறித்து ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க: பாதிக்கப்பட்ட நபரின் காலை கழுவி மரியாதை செலுத்திய முதலமைச்சர்!