இணையதள மோசடி... விழிப்புணர்வுடன் இருக்க டிஜிபி எச்சரிக்கை...!

இணையதள  மோசடி... விழிப்புணர்வுடன் இருக்க டிஜிபி எச்சரிக்கை...!

வேலை தேடுபவர்களையும், தொழில் தொடங்க எண்ணுபவர்களையும் குறி வைத்து இணையதள வாயிலாக மோசடியில் ஈடுபடும் புதிய கும்பலைக் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு காணொளி வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபகாலமாக இணையதள வாயிலாக ஒரு மோசடி கும்பல் பலரை ஏமாற்றி பணம் பறித்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைத்தளங்களில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் காணொளி காட்சி ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அந்த காணொளி காட்சியில் பொதுமக்கள் தாங்கள் செல்லக்கூடிய கடைகளோ அல்லது வேறு நிறுவனங்களுக்கோ தங்களது இணைய முகவரியை கொடுக்கும் பட்சத்தில் அதனை பயன்படுத்தி, மோசடி கும்பல் இணையதளம் வாயிலாக மெயில் ஐடியை பயன்படுத்தி ஒரு போலியான மெயிலை அனுப்புகின்றனர்.

குறிப்பாக அந்த மெயிலில் அவர் குறிப்பிட்ட ரசாயனத்தின் பெயரை குறிப்பிட்டு அதனை வாங்கி கொடுத்தால் தாங்கள் அதிக பணம் கொடுப்பதாக கூறி அதை வாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் முகவரியையும் பதிவிட்டு அனுப்பி இருப்பார்கள்.  குறிப்பாக மும்பையில் ஆர் கே என்கின்ற நிறுவனத்தின் பெயரை போலியாக பதிவு செய்து அந்த பெயரை குறிப்பிட்டு பொதுமக்களுக்கு மெயில் அனுப்புவது வழக்கமாக வைத்துள்ளனர்.

இதை நம்பி பொதுமக்கள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ளும் பொழுது நிறுவனம் ஒன்று முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை அந்த ரசாயனத்திற்கு விலையை தெரிவிப்பார்கள்.  அப்படி தெரிவிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் அதனை நம்பி பணத்தை கொடுக்கும் போது அந்த ரசாயனம் தங்களுக்கு கிடைத்து விட்டதாக கூறி மெயில் மூலம் தான் பொதுமக்களை தொடர்பு கொண்ட நபர்கள் தெரிவிப்பார்கள்.

மேலும் அவர்களுக்கு தாங்கள் வாங்கி அனுப்பிய ரசாயனத்தின் அளவு போதவில்லை எனக் கூறியும் மேலும் கூடுதலாக வேண்டும் என்றும் அதற்கு முன்பு கூறியதை விட அதிகமாக பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி விடுவார்கள்.  ஆனால் உண்மையில் மெயில் அனுப்பிய கும்பலும் அதே போல் ஆர் கே கம்பெனி என பொதுமக்கள் தொடர்பு கொண்ட கும்பலும் ஒரே கும்பல் என்பது பின்னரே தெரியவரும். 

இது போன்ற மோசடியில் ஈடுபடும் கும்பல் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.  குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ளவர்களின் உதவியை வைத்துக்கொண்டு இதுபோன்று பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்கின்றனர்.  பணத்தை ஏமாந்தவர்கள் ஆர் கே கம்பெனி அமைந்துள்ள மும்பாய்க்கு சென்று கேட்ட பொழுது அங்கு வேறு ஒரு நிறுவனம் இருப்பதாகவும் ஆர் கே நிறுவனம் என்பது போலியான நிறுவனம் என்றும் பலரும் தெரிந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எனவே இது போன்ற மோசடி கும்பலிடம் இருந்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும்படி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைத்தளங்களில் காணொளி வாயிலாக பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

இதையும் படிக்க:   சிறப்பான தொழிலாக தமிழ்நாடு இளைஞர்கள் பார்ப்பதில்லை.... வடமாநிலத்தவர்கள் இங்கே அதிகம் உள்ளனர்....!!