பெரியார் பாதையில் ஓ.பி.எஸ்...தாய்க் கழகத்திற்காக திடீர் மாற்றமா?

அதிமுக உட்கட்சிப் பிரச்சினை குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அதிமுக தற்போது பாஜக பிடியில் உள்ளதெனவும் அதில் என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அவர்கள் உடனே டெல்லிக்குச் சென்று பாஜகவிடம் முறையிடுவதாகக் கூறியிருந்தார்.

பெரியார் பாதையில் ஓ.பி.எஸ்...தாய்க் கழகத்திற்காக திடீர் மாற்றமா?

அதிமுகவில் ஏற்பட்டு வரும் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினையால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரின் நகர்வும் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர்களின் அறிக்கைகள், சமூக வலைதளப் பக்கங்களில் என்னென்ன பதிவிடுகிறார்கள் என அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

அதிமுக திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி எனக் கூறப்பட்டாலும் எம்.ஜி.ஆர் பெரும்பாலும் அண்ணாவையே முதன்மைப்படுத்தினார். அதிமுகவின் கொடியில் அண்ணாவின் படத்தைத் தான் பொறித்தார். அண்ணாவின் கொள்கைகள் தான் அதிமுகவில் அதிகம் பேசப்பட்டது. எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜெயலலிதா தலைமையேற்ற பிறகு அவர் எம்.ஜி.ஆரை மையப்படுத்தி தான் கட்சியை நடத்தினார். அவரவர் காலத்தில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்சியை வழிநடத்தினர். திராவிடர் கழக வழித் தோன்றலான திமுக தொடர்ந்து பெரியார் படத்தை பயன்படுத்தி வருகிறது. ஆனால் அதிமுகவில் அண்ணா எம்.ஜி.ஆர் படம் தான் மட்டுமே அதிகம் இடம் பெற்றிருக்கும். அதன் தலைமை முன்னெடுக்கும் சில நிகழ்வுகளில் மற்ற தலைவர்களுடன் பெரியார் படமும் இடம்பெற்றிருக்கும்.

பெரியார் படத்தை பொறித்தால் நாத்திகவாத முத்திரை பதிக்கப்படும் என அதிமுக இதை தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதிமுகவின் மாவட்ட மற்றும் பகுதி நிர்வாகிகள் நடத்தும் கூட்டங்களில் பெரும்பாலும் பெரியார் படம் தவிர்க்கப்பட்டிருக்கும். சில மூத்த அதிமுக நிர்வாகிகள் கூட பெரியார் படம் பொறிப்பதை தவிர்த்தே வந்தனர்.

இதுவரை ஓ.பன்னீர்செல்வம் தமது முகநூல் பக்கத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் தமது படத்தையும் இணைத்து முகநூலின் அட்டைப் படமாக வைத்திருப்பார். ஆனால் கடந்த ஜூலை 1 ஆம் நாள் தமது அட்டைப் படத்தை புதுப்பித்திருந்தார். அதில் அனைவரும் ஆச்சரியப்படும்படியான ஒரு விடயத்தை செய்திருந்தார். அது என்னவென்றால் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படத்துடன் தன்னுடைய படத்தையும் அதில் இணைத்தது தான். இதன் வாயிலாகத் தான் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி என்று நிரூபிக்க முனைகிறாரா என எண்ணத் தோன்றுகிறது.

அதிமுக உட்கட்சிப் பிரச்சினை குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அதிமுக தற்போது பாஜக பிடியில் உள்ளதெனவும் அதில் என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அவர்கள் உடனே டெல்லிக்குச் சென்று பாஜகவிடம் முறையிடுவதாகக் கூறியிருந்தார். ஜெயலலிதா இருந்த போது பாஜகவின் நீட் உள்ளிட்ட விடயங்களை எதிர்த்தார், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா இந்த லேடியா என்று பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார். ஆனால் தற்போது அதிமுகவில் நடக்கும் பிரச்சினைகளைப் பார்க்கும் போது அதன் தாய்க் கழகம் என்ற வகையில் தமக்கு வருத்தமளிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பெரியார் படத்தை முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் இணைத்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

- ஜோஸ்