சீனாவின் 3 குழந்தை திட்டம் வெற்றி பெறுமா? அலசல் கட்டுரை

நமது பூமியில் மனித இனம் தோன்றி சுமார் 20 லட்சம் வருடமாகிவிட்டதாக புவியியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். முற்காலத்தில் மனித இனப்பெருக்கம் மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. இதற்கு நோய்த்தொற்றும் ஒரு காரணமாகும்.

சீனாவின் 3 குழந்தை திட்டம் வெற்றி பெறுமா? அலசல் கட்டுரை
20–ம் நூற்றாண்டு தொடங்கிய பிறகு மருத்துவ விஞ்ஞானம் வேகமாக வளர்ந்தது. அதன்பிறகே மக்கள் தொகை அதிகரிக்கத் தொடங்கியது. இன்றைய காலக்கட்டத்தில் உலகின் மொத்த தொகை 790 கோடியாகும். 
இதில் சீனா முதல் இடம் வகிக்கிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி அந்த நாட்டில் 144 கோடி மக்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. நமது நாட்டின் இப்போதைய மக்கள் தொகை 138 கோடியாகும்.
 
அமெரிக்கா, 33 கோடியுடன் 3–ம் இடத்திலும் இந்தோனேசியா 27 கோடியுடன் 4–வது இடத்திலும், பாகிஸ்தான் 22 கோடியுடன் 5–ம் இடத்திலும் உள்ளன. இவற்றில் அமெரிக்கா, பரப்பளவில் மிகப்பெரியது. ஆனால் மக்கள் தொகை விகிதமோ மிக மிக குறைவு.
 
சீனாவின் நிலப்பரப்பு சுமார் 96 லட்சம் சதுர கிலோ மீட்டராகும். ஆனால் இந்தியாவின் நிலப்பரப்போ 32 லட்சம் சதுர கிலோ மீட்டர் தான். அப்படிப்பார்த்தால் சீனாவைக் காட்டிலும் இந்தியாவில் தான் மக்கள் தொகை அடர்த்தி அதிகம்.
 
குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம்
 
இந்தியாவுடன் ஒப்பிட்டால் சீனாவின் நிலப்பரப்பு சுமார் 3 பங்கு அதிகமாகும். அப்படி பார்த்தால் சீனாவின் மக்கள் தொகை நம்மை விட 3 பங்கு இருக்க வேண்டும். ஆனால் அந்த அளவுக்கு சீனாவின் மக்கள் தொகை உயரவில்லை. 
 
இதற்கு காரணம் அந்த நாடு கடுமையாக அமல்படுத்திய குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் தான். இந்தியாவிலும் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில் ‘‘நாம் இருவர் நமக்கு இருவர்’’ என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டது.
 
பின்னர் ‘‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’’ என்றும், அதன் பிறகு ‘‘நாமே குழந்தைகள் நமக்கு ஏன் குழந்தைகள்’’ என்ற கோஷங்களும் எழுந்தன. 

 
அதைப்போல சீனாவிலும் 1979–ம் ஆண்டிலிருந்து குடும்பக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் ஒரு குழந்தை திட்டத்தை அறிவித்தது. அதாவது ஒரு தம்பதியர் ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் குழந்தைகளை பெற்றெடுத்தால் அவர்களுக்கு அரசாங்கத்தின் சலுகைகள் கிடைக்காது; அரசு வேலை கிடையாது என அறிவிக்கப்பட்டது.
 
வேலை பறிக்கப்பட்டது
 
ஒருவேளை அரசுப் பணியில் சேர்ந்த பிறகு கூடுதல் குழந்தைகளை பெற நேர்ந்தால் அவருடைய வேலை பறிக்கப்பட்டது. கட்டாய கருக்கலைப்பும் செய்யப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டது. 
இதனால் சீனாவின் மக்கள் தொகை பெருக்கம் வெகுவாக குறைந்தது. அதனால் தொழில் செய்வதற்கு மக்கள் சக்தி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே 2000–வது ஆண்டில் தளர்வை அறிவித்தது.
 
அதன்படி ஒரு தம்பதியர் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் தொடக்கத்தில் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதாவது கணவன்–மனைவி ஆகிய இருவரும் அவரவர் தாய் தந்தையருக்கு ஒரே குழந்தை என்றால் அந்த தம்பதியர் மட்டும் 2 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம். மற்ற தம்பதியருக்கு 2 குழந்தைகள் பெற அனுமதி கிடையாது.
 
பிரசவத்திற்கு அனுமதி கிடையாது
 
இந்த திட்டமும் எதிர்பார்த்த பலனை தரவில்லை. எனவே 2013–ம் ஆண்டில் மேலும் ஒரு தளர்வை அறிவித்தது. அதன்படி எல்லா தம்பதியரும் 2 குழந்தைகளை பெற்றெடுக்க அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது. ஒருவேளை முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு 2–வது பிரசவத்திற்கு அனுமதி கிடையாது.
 
இப்படி அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் அடையவில்லை. மாறாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. சீனாவில் பிறப்பு விகிதம் 2.1 என்ற அளவில் இருக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது 1.3 என்ற விகிதமாக குறைந்துவிட்டது. 

 
2016–ம் ஆண்டில் சீனாவில் 1.78 கோடி குழந்தைகள் பிறந்தன. 2017–ல் 1.72 கோடி குழந்தைகள் மட்டுமே பிறந்தன. அதற்கு அடுத்த ஆண்டான 2018–ல் 1.52 கோடியாக குறைந்தது. 2019–ல் 1.46 கோடி குழந்தைகளே பிறந்தன.
 
கடந்த ஆண்டு ஒரு கோடி குழந்தைகள் மட்டுமே பிறந்தன. அதாவது ஒரே ஆண்டில் 31 சதவீதம் பிறப்பு வீழ்ச்சியடைந்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சமூக இடைவெ ளியை காரணம் காட்டி குழந்தை பெற்றுக் கொள்வதை சீனர்கள் தவிர்த்ததாக ஒரு தகவல் கூறப்படுகிறது. ஆனால் இது கடந்த ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும்.
 
இளம் தம்பதியர்
 
குடும்ப கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்ட காலக்கட்டத்தில் இருந்தே சீனாவில் குழந்தைகளின் விகிதம் குறையத் தொடங்கிவிட்டது. சிறு குடும்பத்துடன் வாழ்ந்து பழகிய இளம் தம்பதியர் அடுத்து பெரிய குடும்பத்தின் மீது நாட்டம் கொள்ளவில்லை.

 
சொகுசான வாழ்க்கை வாழப் பழகியவர்கள் அதிக குழந்தைகளை பெற விரும்பவில்லை. கல்வியறிவு வளர்ச்சியும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. நவநாகரீகத்தில் மூழ்கிய இக்காலப் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பவில்லை என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
சீனாவில் பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கிய நாள் முதல் மக்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. பொருள் உற்பத்தியிலும் இந்த நாடு தான் தற்போது முதல் இடத்தில் உள்ளது. ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.
 
மனித சக்தி
 
அதனால் வேலைவாய்ப்பு பெருகியது. ஆண்களும் பெண்களும் பணிக்குச் செல்லத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட நிலையில் குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதுவும் அதிக குழந்தைகள் பெறுவதை தடுக்கும் ஒரு காரணியாக அமைந்துவிட்டது என்கின்றனர். அதனால் சீன சமூகத்தில் இளைஞர்களின் விகிதம் வெகுவாக சரிந்து வருகிறது. குடும்ப கட்டுப்பாடு அறிவிக்கப்பட்ட சமயத்தில் இளம் தம்பதியர்களாக இருந்தவர்கள் இப்போது 60 வயதை கடந்துவிட்டனர்.
சீனாவில் தற்போது 27 கோடி பேர் 60 வயதை கடந்துள்ளார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 19 சதவீதம் பேர் ஆவர். இன்னும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிடும். 
 
பஞ்சம் ஏற்பட்டு விடும்
 
ஆகவே முதியவர்கள் நிறைந்த நாடாக சீனா மாறிவிடும். அதே நேரத்தில் இளைஞர்கள் குறைந்த நாடாகவும் ஆகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மனித சக்திக்கு அங்கு பஞ்சம் ஏற்பட்டு விடும். அரசு வேலை, தொழிற்சாலை வேலைகள் போன்றவற்றிற்கு ஆள் கிடைக்காது. விவசாயம் செய்வதற்கு கூட மனித பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக முதியோர்களை பராமரிப்பதற்குக் கூட பிள்ளைகள் இல்லாத நிலை ஏற்பட்டு விடும் என அந்நாட்டு அரசு அஞ்சுகிறது.
இந்த சூழ்நிலையை ஆராய்ந்து தற்போது ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த கொள்கையும் முழு பலனை தருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
 
சங்கடங்கள்
 
சொகுசான வாழ்க்கையில் மூழ்கிய இளம் தலைமுறையினர் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ‘‘ஒரு குழந்தை கூட பெற்றுக் கொள்ள விருப்பமில்லாத அளவுக்கு குறைந்த வருமானம் கொண்டுள்ள நிலையில் 3 குழந்தைகளை பெற்றெடுக்கும் திட்டமா’’ என ஒரு பெண் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளார்கள். 
 
பெண்கள் மகப்பேறு விடுப்பு எடுப்பதிலும் பணியிடம் சார்ந்த பல சங்கடங்கள் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதேநேரத்தில் சீன அரசின் இந்த நடவடிக்கையை அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் அனைத்தும் வரவேற்றுள்ளன.