பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொங்கி எழுந்த இலங்கை மக்கள்.. காலிமுகத் திடலில் 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!!

இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் 9-வது நாளாக நீடிக்கிறது.

பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொங்கி எழுந்த இலங்கை மக்கள்.. காலிமுகத் திடலில் 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர்ந்த போராட்டம் தற்போது கோத்தபய ஆட்சி மற்றும் ராஜபக்சே குடும்பத்தின் சர்வாதிகாரத்தை அகற்றும் போராட்டமாக மாறி வலுப்பெற்றுள்ளது.

கொழும்பு காலிமுகத் திடலில் "கோட்டாகோகம" என்ற பெயரில் தொடங்கப்பட்ட போராட்டம் இன்று 9-வது நாளை எட்டியுள்ளது. மழை, வெயில் பாராமல் மக்கள் உறுதியான நிலைப்பாட்டுடன் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் இரவு நேரங்களில் திடலில் விளக்குகளை ஏற்றி கவனம் ஈர்க்கின்றனர்.

பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற ராஜபக்சேவின் பேச்சை இலங்கை மக்கள் செவிமெடுப்பதே இல்லை. போராட்டத்துக்கான ஆதரவு நாளுக்கு நாள்  பெருகி வரும் நிலையில், ராஜபக்சே குடும்பம் முழுமையும் அரசியலில் இருந்து வெளியேற்றுவது , பொருளாதாரத்தை மீட்டெடுப்பது,பக்சே குடும்பத்தினர் கொள்ளையடித்த பணத்தை பறிமுதல் செய்வது, 6 மாதங்களுக்குள் அதிபர் மற்றும் பொதுத்தேர்தல் என்ற கோரிக்கைகளில் மக்கள் உறுதி காட்டுகின்றனர்.

பல்வேறு நாடுகளின் உதவியுடன் விடுதலைப் புலிகளை வீழ்த்தி விட்டார் என்றுதான் ராஜபக்சே குடும்பத்தினரை இலங்கை மக்கள் உச்சாணியில் அமர்த்தி அழகு பார்த்தனர். ஆனால், சர்வாதிகாரப் பாதையில் நடந்து  நாட்டை அதலபாதாளத்திற்கு கொண்டு சென்று விட்ட பக்சேக்களை இன்று அதே மக்கள்தான் ஆட்சியில் மட்டுமல்ல அரசியலில் இருந்தே விரட்டியடிக்க வீதியில் இறங்கியுள்ளனர். இதுதான் செய்த பாவத்திற்கு காலம் தரும் தண்டனை என்கின்றனர் இலங்கை அரசியல் நோக்கர்கள்.