இஸ்ரேலில் அனைத்து பள்ளிகளையும் மூட ராணுவம் உத்தரவு!!

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதக்குழு நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 600- ஆக அதிகாித்துள்ள நிலையில், இஸ்ரேலில் அனைத்து பள்ளிகளையும் மூட ராணுவம் உத்தரவிட்டுள்ளது. 
 
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதக் குழு ஏவுகணை தாக்குதலை நடத்தியது. திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, அதிர்ச்சி ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தியது. 5-வது நாளாக தொடர்ந்து வரும் போரால், பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் உயிாிழந்தோாின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 600- ஆக உயா்ந்துள்ளது. தொடர்ந்து நடந்து வரும் சண்டையை முன்னிட்டு, இஸ்ரேல் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் வரவுள்ள நாட்களில் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது. இதுதவிர, நேதன்யாகுவுக்கு தெற்கே மற்றும் மத்திய நெகேவ் பகுதிக்கு வடக்கே வர்த்தக நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

வெடிகுண்டு புகலிடங்களுக்கான வசதிகள் உடனடியாக கிடைக்குமென்றால் மட்டுமே வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்தலாம் என ராணுவம் அனுமதித்து உள்ளது. இதேபோன்று, இந்த பகுதிகளில், வெளியே 10 பேருக்கு மேல் கூடுதலாக ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்ளரங்கங்களில் 50 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே காசா மருத்துவமனைகளில் 2 ஆயிரம் படுக்கைகளே உள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டி சூழல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. மருத்துவா்கள் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு, தாக்குதலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேதப்படுத்தபட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஆஷ்கெலான் பகுதியில் தாக்குதல் நடத்தப்படும் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதன்படி, ஏவுகணை தாக்குதல் நடந்ததும், ஆஷ்கெலான் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனால், மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக வெடிகுண்டு புகலிடங்களை நோக்கி ஓடினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.