திருப்பூரில் கல்லூரி மாணவிகள்  பாஜகவினரிடையே வாக்குவாதம்!

திருப்பூரில் கல்லூரி மாணவிகள்  பாஜகவினரிடையே வாக்குவாதம்!

திருப்பூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் என்ற பெயரில் பாஜகவினர் இடையூறு செய்வதாக கூறி கல்லூரி மாணவிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் "செல்பி வித் அண்ணா" என்ற போட்டி நடத்தப்படுவதாகவும் அதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது.

இந்நிலையில் திருப்பூர்- பல்லடம் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு சென்ற பாஜகவினர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பிரச்சாரத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்தினர் தேர்வெழுதிய மாணவிகளை பின்வாசல் வழியாக அனுப்பி வைத்தனர். இந்தத் தகவலை அறிந்த பாஜகவினர் கல்லூரிக்குள் நுழைந்து பேராசிரியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முன்புற கேட்டை  திறக்க வலியுறுத்தினர். அதன் பிறகு கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவிகளிடம் பாஜகவினர் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் அப்போது  பாஜகவினருடன் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கல்லூரிக்கு முன்பாக அனுமதி இல்லாமல் இது போன்ற பிரச்சார நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்றும் உடனடியாக கலைந்து போக வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரித்ததையடுத்து பாஜகவினர் கலைந்து சென்றனர். பாஜகவினரின் இந்த மோசமான செயல் மாணவ சமுதாயத்தினரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.