ஆளுநர் ஆர் என் ரவிக்கு, மீண்டும் "சனாதனம்" குறித்த கேள்விகளை கேட்ட வழக்கறிஞர்!

ஆளுநர் ஆர் என் ரவிக்கு, மீண்டும் "சனாதனம்" குறித்த கேள்விகளை கேட்ட வழக்கறிஞர்!

சனாதன தர்மம் இந்தியாவில் உள்ள அனைத்து சாதி மற்றும் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா? என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார், வழக்கறிஞர் எஸ்.துரைசாமி.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் சனாதன தர்மம் குறித்து கேள்விகளை கேட்டுள்ளார். அதில், சனாதன தர்மம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும் என்று சமீபத்தில் ஆளுநர் பேசியுள்ளதாகவும், சனாதன தர்மத்தைப் பற்றிய முழுத் தகவல் உங்களிடம் உள்ளது என்பது இதன் மூலம் காட்டுவதாகவும், இது சம்பந்தமாக தகவல் அறியும்  சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் கேட்ட கேள்விகளானது, சனாதன தர்மம் இந்தியாவில் உள்ள அனைத்து சாதி மற்றும் அனைத்து மதத்தினருக்கும் சமமாக பொருந்துமா? சனாதன தர்மத்தின்படி பிராமண சமூகமும், ஆதி திராவிடர் சமூகமும் சம அந்தஸ்தில் உள்ளனரா? அப்படியானால் சனாதன தர்மத்தின்படி பிராமண சமூகத்தினர் கழிப்பிடங்களில் துப்புரவு பணியாளர்களாக நியமிக்கப்படுவார்களா? பார்த்தசாரதி கோயில் அர்ச்சகர்கள் சிலரை, சென்னை மாநகராட்சி கழிவறைகளில் துப்புரவு பணியாளர்களாக இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவீர்களா? உள்ளிட்ட கேள்விகளுக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதிலளிக்குமாறு, கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே சனாதன தர்மம் தொடர்பாக என்ன ஆதாரம் உள்ளது? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  கேட்டிருந்தார். ஆனால் ஆளுநர் தரப்பில் எந்த பதிலும் அளிக்காத நிலையில் அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இது குறித்து, ஆளுநர் அலுவலக மேல்முறையீட்டு ஆணையம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மதுரையில் புதிய ஜல்லிக்கட்டு மைதானம்...அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!