சென்னையில்  பிரதமர் மோடி...! ரூ.5,200 கோடி திட்டங்கள் தொடங்கி வைப்பு...!! 

சென்னையில்  பிரதமர் மோடி...!  ரூ.5,200 கோடி திட்டங்கள் தொடங்கி வைப்பு...!! 

ஒருநாள் பயணமாக சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை, சென்னை விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட  ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். 

சென்னை விமான நிலைய புதிய முனையம், வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக நேற்று தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அங்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, திமுக தலைவரும்  தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அவர்களை வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு லட்சத்து 36 ஆயிரம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் புதிய முனையத்தை பார்வையிட்டார். இந்த புதிய முனையம் மூலம் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் சேவைத் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இப்புதிய முனையம் கோலம், சேலை, கோயில்கள் போன்ற பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும், இயற்கையான சுற்றுப்புறத்தைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, சென்னையில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீராம கிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ஸ்ரீராம கிருஷ்ணா மடத்தின் சார்பில் விவேகானந்தரின் முழு உருவச் சிலை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விவேகானந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 

அந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி உரையைத் தொடங்கி, தமிழ் மொழியையும் தமிழ் கலாசாரத்தையும் சென்னையையும் விரும்புவதாக குறிப்பிட்டார். விவேகானந்தர் கண்ட கனவு நனவாகும் வகையில் இந்தியாவிற்கான காலம் அமைந்து வருவதாகக் கூறிய அவர், பெண்கள் முன்னேற்றத்தை விவேகானந்தர் வலியுறுத்தியதாகவும், அதனை மத்திய அரசு நிறைவேற்றி வருவதாகவும் கூறினார். 

மேலும், அனைவருக்கும் சமமான வாய்ப்பளிப்பதன் மூலம், சமுதாயம் முன்னேற்றமடையும் எனவும் அவர் கூறினார். இன்றைய இந்தியா பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நம்புவதாக குறிப்பிட்ட அவர், விளையாட்டு, ஆயுதப்படை, உயர்கல்வி என எதுவாக இருந்தாலும், பெண்கள் தடைகளை உடைத்தெறிந்து புதிய சாதனைகளை படைப்பதாகவும் அவர் கூறினார்.