மதுரையில் மீண்டும் துவங்கியது பசுமை நடைபயணம்!

மதுரையில் மீண்டும் துவங்கியது பசுமை நடைபயணம்!

வரலாற்று தலங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கும் அளிக்கும் நோக்கில் நிகழ்த்தப்படும் பசுமை நடை இயக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உற்சாகத்துடன் துவங்கியது.

வரலாற்றுத் தலங்களை நோக்கி

மதுரையின் வரலாற்று தலங்கள் நோக்கி மக்களை ஈர்க்கும் பசுமை நடை இயக்கம் 2010ல் இருந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறு, தொல்லியல், சூழலியல் சார்ந்து இயங்கி வருகிறது. மலைகள், குடைவரைகள், நீர் நிலைகள், ஆற்றோர மண்டபங்கள், அகழாய்வு தலங்கள், கற் திட்டைகள் உள்ளிட்ட தொல் தலங்களுக்கு லட்சக்கணக்கான மக்களை அழைத்து சென்றதன் விளைவாக தமிழகம் முழுவதும் தொல்லியல் குறித்த விழிப்புணர்வு தீவிரமடைந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபயணம்  

ஒவ்வொரு நடையின் போதும்  தொல்லியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று அந்த இடங்களின் வரலாற்று சிறப்புகள் குறித்து எடுத்துரைப்பர்.மாதம் தோறும் ஒரு ஞாயிற்று கிழமையன்று நடைபெறும் பசுமை நடையில் இதுவரை நான்கு பெரும் திருவிழாக்கள், நான்கு புத்தக வெளியீடுகள் நிகழ்த்தியிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்விலும் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என குடும்பம் குடும்பமாக சாதி, மத பேதமின்றி அனைவரும் கலந்து கொள்வர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளாக நிகழாமல் இருந்த பசுமை நடை, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று (ஆகஸ்ட் 21) காலை கீழக்குயில்குடி சமணர் மலையில் துவங்கியது. நிகழ்வில் மதுரை மட்டுமல்லாது வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும்  நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மலை குறித்த சிறப்புகள்

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பங்கேற்பாளர்களை ஒருங்கிணைத்து அழைத்து சென்றார். சமணர் மலையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள பேச்சிப்பள்ளம் எனும் இடத்தில் சமணர் மலையின் சிறப்புகள் குறித்த அறிமுகமும், சித்திரைவீதிக்காரன் எழுதிய திருவிழாக்களின் தலைநகரம் நூலின் இரண்டாம் பதிப்பும் வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, பங்கேற்ற மக்களுக்கு கீழடி குறித்த புத்தகம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. கொரோனா கால நெருக்கடிகளில் இருந்து மீண்டுள்ள நிலையில் பசுமை நடை வழியாக மதுரையின் வரலாற்றோடு சேர்த்து புதிய உதயத்தையும், புது காற்றையும், புதிய மனிதர்களையும் அனுபவிப்பது மகிழ்சியளித்ததாக மக்கள் தெரிவித்தனர்.