ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் பழ.நெடுமாறன் உட்பட பலர் கைது!

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் பழ.நெடுமாறன் உட்பட பலர் கைது!

திருக்குறள் குறித்து அவமதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதைக் கண்டித்து, அண்ணா சாலையில் அமைந்திருக்கும் பனகல் மாளிகைக்கு முன்பாக தமிழர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.

திருக்குறள் அவமதிப்பு

ஆளுநர் ரவியால் திருக்குறள் அவமதிக்கப்பட்டதாக சில நாட்களுக்கு முன் ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார். அதில் அவர் கூறிய கருத்துகள், வடமொழியின் ஊடுருவலால் ஊறு நேராமல் தடுக்க இலக்கண வேலி அமைத்து தமிழ்மொழியைக் காத்தவர் தொல்காப்பியர். வடவரின் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழரின் பண்பாடு அழியாமல் காக்கப் பண்பாட்டு வேலி அமைத்துப் பாதுகாத்தவர் திருவள்ளுவர்.

வள்ளுவரின் நூலுக்குத் தொல்காப்பியமே வழிகாட்டும் இலக்கணமாயிற்று. தொல்காப்பியர் வகுத்த நான்கு வகைப் பாவினங்களும், அறம் முதலிய மூன்று பொருட்கண்ணே இயங்கவேண்டும். அதற்கிணங்க அறம், பொருள், இன்பம் என முப்பாலாகத் தனது நூலை யாத்தவர் வள்ளுவர். தொல்காப்பியமோ, திருக்குறளோ மற்றும் தொகை நூற்களோ வீடு பேற்றை அல்லது மோட்சத்தைக் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இந்த இலக்கண இலக்கியங்கள் எழுந்த காலத்தில் அறம், பொருள், இன்பம் இம்மூன்றுமே தமிழர்களின் நோக்கங்களாகவும், வழிகாட்டும் நெறிகளாகவும் திகழ்ந்தன. வீடு என்று கூறப்படும் நான்காம் உறுதிப் பொருள் பின்னர் புகுத்தப்பட்ட கருத்தேயாகும். பிற்காலத்தில் எழுந்த நூற்களிலேயே நாற்பால் பேசப்படுகிறது.

 உளறினாரா ஆளுநர்

“திருக்குறளில் உள்ள ஆன்மிக ஞானத்தை சிதைக்கும் வகையில் ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள ஆதிபகவன் என்பதையே திருக்குறளின் முதல் குறள் கூறுகிறது. ஆதிபகவன் என்பது பக்தியை குறிப்பிடுவதாகும். இதை சிதைக்கும் வகையில் ஆங்கில மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது” என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தில்லியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பேசியுள்ளார்.

சமயம் என்னும் சொல்லாட்சி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை காப்பியத்தில்தான் முதன்முதல் இடம்பெறுகிறது. அதற்கு முன்னால் தோன்றிய பழந்தமிழ் நூல்கள் எதிலும் சமயம் என்ற சொல்லாட்சி இடம்பெறவே இல்லை. சமயங்களோ, சமயத்திற்குரிய கடவுள்களோ பழந்தமிழகத்தில் இல்லை. ஐந்திணைகளும் அவ்வவ் திணைகளுக்குரிய தெய்வங்களும் மட்டுமே உண்டு. அந்த தெய்வங்களும் சமய தெய்வங்களல்ல. அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளைப் பற்றியே திருக்குறள் கூறுகிறது. மோட்சத்தைக் குறிக்கும் வீடு என்ற தத்துவம் திருக்குறள் எழுந்த காலத்தில் அறவே தோன்றப் பெறவில்லை. பழந்தமிழரின் பண்பாடு குறித்தோ, பழக்கவழக்கங்கள் குறித்தோ எதுவுமே தெரியாமல் யாரோ தப்பும் தவறுமாக எழுதிக் கொடுத்ததைத் திருத்திப் பேசவும் தெரியாமல் ஆளுநர் உளறிக் கொட்டியிருப்பது அவர் வகிக்கும் பதவியின் மாண்பை சீர்குலைப்பதாகும்.

ஆளுநர் மாளிகை முற்றுகை

திருக்குறள் ஆளுநரால் அவமதிக்கப்பட்டதிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் செப்டம்பர்-10 அன்று ஆளுநர் மாளிகை முற்றுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் இன்று காலை முதலே காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

 தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்பினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.