நாடாளுமன்ற தேர்தலில் துரை.வைகோ போட்டியா?

இழந்ததை மீட்போம் என்ற இலக்குடன் மதிமுக செயல்படுகிறது

நாடாளுமன்ற தேர்தலில் துரை.வைகோ போட்டியா?

மயிலாடுதுறையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் 'மாமனிதன் வைகோ" என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. 

மூன்று ஆண்டுகளில் மதிமுகவுக்கு வளர்ச்சி

இதில், மதிமுகவின் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டு, திரைப்படத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, மதிமுகவின் வாக்கு வங்கியில் கடந்த 10 ஆண்டுகளில் சரிவு இருந்தது.இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டனாக 29 ஆண்டுகள் இருந்தேன். நான் நேரடி அரசியலுக்கு வந்த பின்னர் கடந்த 3 ஆண்டுகளில் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. திமுகவுக்கு அடுத்ததாக தாங்கள்தான் என்ற பிம்பத்தை பாஜகவினர் உருவாக்குகின்றனர். பாஜகவுக்கு என்ன ஆதரவு உள்ளது என்பது தேர்தல் நேரத்தில் தெரியும். 

குழப்பத்தை ஏற்படுத்தும் பாஜக

திமுக ஆட்சி திருப்தியளிக்கும்; வகையில் இருக்கிறது. எல்லா இடத்திலும் ஒரிரு குறைகள் இருக்கும். அதனை பாஜக மிகைப்படுத்தி தவறான பிம்பத்தை பாஜகவினர் உருவாக்குகின்றனர் என்றார். திமுக அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கூறுகையில், அமைச்சர் கூறிய விதம் தவறாக இருக்கலாம். ஆனால் அதனை வெட்டி ஒட்டி இணையதளத்தில் வெளியிட்டு திட்டமிட்டு பாஜகவினர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்றார். 

தேர்தலில் துரை வைகோ போட்டியா?

நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவெடுக்கும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உணவுப் பஞ்சம் ஏற்படும். அதனை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, மத்திய அரசிடம்தான் அனைத்து நிதிகளும் உள்ளன. ஆனால் மத்திய அரசே இவ்வாறு கூறுவது நோயாளியிடம் மருத்துவரே நீ சாகப்போகிறாய் தயாராக இருந்துகொள் என்று கூறுவதைப் போன்று உள்ளது.

இழந்ததை மீட்போம் என்ற இலக்குடன் மதிமுக செயல்படுகிறது என்றார். இதில், திமுக எம்எல்ஏ நிவேதா முருகன், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு திரைப்படத்தை பார்வையிட்டனர்.