ஆளுநரை கண்டித்து தீர்மானம்...! பேரவையில் நிறைவேறியது...!!

ஆளுநரை கண்டித்து தீர்மானம்...! பேரவையில் நிறைவேறியது...!!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியுள்ளது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சட்ட மசோதாவிற்கு, ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வரும் நிலையில் ஆளுநரை கண்டித்து சட்டப்பேரவையில் இன்று தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் முக ஸ்டாலின் பேசுகையில், ஆளுநர் அரசியல் சட்டத்தை கடந்து  அரசியல் கட்சியை போல செயல்படுவதால் இரண்டாவது முறையாக இந்த ஆளுநரை கண்டித்து தீர்மானத்தை கொண்டுவருவதாக கூறினார். மேலும் இந்தியாவில் கூட்டாட்சியை ஏற்படுத்த திமுக முன்னணிப்படையாக செயல்படும். அதை உணர  வேண்டியவர்கள் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய விதமாக பேசுகிறார் என்றும்  அவர் வகிக்கும் பதவிக்கு உள்ள தகுதிகளை எல்லாம் மறந்துவிட்டு பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டம் நிறைவேற்றும் உரிமைகளை மக்களால் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளுக்கு வழங்கிவிட்டு அதற்கு ஒப்புதல் வழங்கும் உரிமையினை நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு வழங்குவது மக்களாட்சி மாண்பு ஆகாது என்பதால் இந்திய அரசியலை சட்டத்தில் இதுகுறித்து திருத்தும் செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார். 

முன்னதாக ஆளுநர் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இத்தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்  மொத்தமிருந்த 146 உறுப்பினர்களில் 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். பாஜக உறுப்பினர்கள் 2 பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டில் ஆளுநருக்கு எதிராக நிறைவேற்றப்படும் இரண்டாவது தீர்மானம் இது என்பது குறிப்பிடத்த்தக்கது.