"கள் இறக்கும் போராட்டத்தை தொடர்வோம்": தென்னை விவசாயிகள்!

"கள் இறக்கும் போராட்டத்தை தொடர்வோம்": தென்னை விவசாயிகள்!

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில், தென்னை விவசாயிகள் கள் இறக்குவதை நிறுத்த வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், பொள்ளாச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள், அதிக அளவில் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். இந்த வருடம் தேங்காய் விளைச்சல் அதிகளவில் இருந்தாலும், தேங்காயின் விலை மிகவும் குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்து வருவதால், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அருகில் உள்ள கேரளா மாநிலத்தை போல் தமிழகத்திலும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்திற்கொள்ளாமல், தமிழக அரசு இதுவரை கள் இறக்க அனுமதி வழங்கவில்லை.

தமிழகத்தில் கள் இறக்க, தமிழக அரசு தடை விதித்திருந்தாலும், விவசாயிகள் தங்களது வாழ்வதாரத்தை காக்க வேண்டி, சில பகுதிகளில், கள் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். காவல் துறைக்கு தகவல் கிடைக்கும் பட்சத்தில், கள் இறங்குபவர்கள் கைதும் செய்யப்படுகிறார்கள்.

இந்நிலை தொடர்வதால், மதுவிலக்கு ஆய்வாளர் சுஜாதா, விவசாயிகளை அழைத்து    தடையை மீறி கள் இறக்கும் விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கண்டிப்புடன் தெரிவித்தார்.

அதில் கலந்து கொண்ட, விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நபர் ஒருவர் பேசிகையில், "தேங்காய் விலை வீழ்ச்சியால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கி சென்று விட்டது,  ஆகவே நாங்கள் கள்ளிறக்கும் போராட்டத்தை கைவிட மாட்டோம் தொடர்ந்து கள் இறக்கி விற்பனை செய்வோம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: "கலெக்டரிடம் சென்று மின் இணைப்பு கேளுங்கள், இல்லையெனில் ரூ 10 லட்சம் கொடுங்கள்": மின் ஊழியர் சர்ச்சை பேச்சு!