மாடியிலிருந்து தரையில் குதிப்பதாக எண்ணி, மின் கம்பிகளில் விழுந்து உயிரை விட்ட இளைஞர்!!

மாடியிலிருந்து தரையில் குதிப்பதாக எண்ணி, மின் கம்பிகளில் விழுந்து உயிரை விட்ட இளைஞர்!!

குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞர் ஒருவர் மாடியில் இருந்து தரையில் குதிப்பதாக எண்ணி மின்சார கம்பியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரத்தை அடுத்த மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் டேனியல். 23 வயதான இவர் கடந்த 17-ம் தேதியன்று இரவில பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் உள்ள மணிகண்டன் என்ற நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தார். 

வீட்டில் தாய் தந்தையுடன் பயங்கர சண்டை போட்டு விட்டு வந்ததாக ஆவேசத்துடன் கூறியவர், நண்பனை மதுவாங்கி வரச் சொல்லியுள்ளார். இதையடுத்து மணிகண்டனும் டாஸ்மாக் சென்று மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். 

சுமார் 11 மணியளவில் நண்பனிடம் வீட்டு பிரச்சினைகள் பற்றி அழுது கொண்டே பேசிய டேனியல் வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும் இனிமேல் வீட்டுக்கே செல்வதில்லை என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்ட மணிகண்டன் எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் அத்தனையும் வீணாய் போனது. ஒரு கட்டத்தில் நண்பனின் வற்புறுத்தலால் வெகுண்டெழுந்த டேனியல், வீட்டுக்கு போகவே முடியாது என்றும் செத்தாலும் சாவேன் என கூறியதோடு மாடியில் இருந்து குதித்துள்ளார்.

இதைப் பார்த்து திடுக்கிட்டுப் போன மணிகண்டன் ஓடி வருவதற்குள் அங்கு நிலைமையே தலைகீழாய் மாறிப்போயிருந்தது. எதிர்பாராத விதமாக தெருவில் படர்ந்து விரிந்த மின்கம்பிகளில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி தரையில் கூட விழாமல் கம்பியிலேயே தொங்கியவாறு பரிதாபமாக உயிரிழந்தார். 

டேனியல் விழுந்ததில் மின்சாரம் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது அதிர்ந்துள்ளனர். இதையடுத்து பீர்க்கன்கரணை காவல் நிலையம், தாம்பரம் தீயணைப்பு துறை, முடிச்சூர் மின்வாரியம் மற்றும் ஆரம்ப சுகாதாரத்துறை என நான்கு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று இளைஞரின் உடலை மீட்டனர். 

குடும்ப பிரச்சினை காரணமாக 23 வயது இளைஞன் எடுத்த இந்த திடீர் முடிவால் அந்த பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிக்க || கடத்தப்பட்ட மாற்றுத்திறனாளி... அலட்சியம் காட்டும் காவல்துறை!!