எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் திரண்ட அதிமுகவினர் கைது!

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் திரண்ட அதிமுகவினர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் அங்கு திரண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, வடவள்ளி பகுதியில் உள்ள ஒப்பந்ததாரரான சந்திரசேகர் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த தகவல் அறிந்து  அங்கு அதிமுகவினர் குவிய தொடங்கினர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான அருண்குமார், அம்மன் அர்ஜுனன், தாமோதரன், செல்வராஜ், ஜெயராமன், உள்ளிட்டோரும் அங்கு வந்த நிலையில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வேலுமணி வீட்டின் முன்பாக அமர்ந்து தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது காவல்துறையினர் அதிமுகவினரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

கைது செய்யப்பட்ட அதிமுக தொண்டர்கள்

எனினும் அவர்கள் கலைந்து செல்லாததால் 150 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு  அதிமுகவினரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மேலும் அப்பகுதியில்  நின்றிருந்த நபர்களையும் பிடித்து காவல்துறை வாகனத்தில் ஏற்றியதால் பதட்டம் உருவானது.இதனிடையே போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு  ஈடுபடுவதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.