மின் கட்டண உயர்வு மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது…முன்னாள் அதிமுக அமைச்சர்!

மின் கட்டண உயர்வு மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது…முன்னாள் அதிமுக அமைச்சர்!

மதுரை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இதில் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று ஆசிரியர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

மின் கட்டணம் உயர்வு

தமிழ்நாடு அரசின் வருவாய்துறை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. மின்சார கட்டண உயர்வு மிகப் பெரிய பொருளாதார சிக்கலை உருவாக்கும், சாமானிய மக்கள் முதல் தொழில் முதலீட்டாளர்கள் அனைவரும் இதனால் பாதிக்கப்படுவார்கள். தற்போது உயர்த்தப்பட்ட மின் கட்டணத்துடன் சேர்த்து வருடம் வருடம் இயற்றப்படும் ஆறு சதவீத மின் கட்டண உயர்வும் அடங்கும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் குற்றங்கள்

தமிழ்நாட்டில் 31 நாட்களில் 131 கொலைகள் நடந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 23 கொலைகள் நடந்துள்ளது.குற்றங்களை தடுப்பதில் காவல்துறை தோல்வி அடைந்து விட்டதா? என்ற கவலை மக்களிடம் எழுந்துள்ளது. மக்கள் மத்தியில் உள்ள அச்ச உணர்வை போக்கு பொறுப்பு காவல்துறைக்கும் அரசுக்கும் உண்டு

திமுக ஆட்சி நிர்வாக குறைபாடு ஏற்பட்டுள்ளது. காவல்துறையில் தலையீடு இருப்பதால் திறமை வாய்ந்த காவலர்கள் பணியை செய்ய முடியவில்லை. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆன்லைன் ரம்மி மூலம் தற்கொலை செய்து கொள்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை நோக்கி காத்திருக்கிறார்கள். அதற்கு எந்த முயற்சியும் எடுத்தது போல் தெரியவில்லை.

சாதனை அல்ல வேதனை

திமுக ஆட்சியில் தினம் தினம் விழா நடத்துவதும் விழா நாயகனாக முதல்வர் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது.அதற்காக மட்டுமே அரசு ஒட்டுமொத்தமாக கவனம் செலுத்துகிறது. மக்களுக்கு சேவை செய்வதில் குறைபாடு உள்ளது.

கடந்த ஒன்றை ஆண்டுகளில் நாட்டு மக்களுக்காக என்ன திட்டங்கள் கொண்டு வந்தார் என்று கேட்டால் பூஜ்ஜியம் மட்டுமே பதில். நாங்கள் கொண்டு வந்த பல திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அவர் கொண்டு வந்த திட்டமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது மின்சார கட்டணம் சொத்து வரி மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாண்புமிகு முதலமைச்சர். தற்போது மௌனமாக இருந்து  வருகிறார். மக்களின் குறை நிறைகளை கனிவேடு கேட்கக் கூடியவர் தான் தலைசிறந்த தலைவராக இருக்க முடியும். யார் பேச்சும் கேட்க மாட்டேன் நான் சொல்வது தான் சட்டம் என இருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பேசுவது நகைச்சுவையாக உள்ளது. திமுக ஓராண்டு சாதனை இல்லை வேதனையை தான் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளனர்.