ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் தொடரும் உயிரிழப்பு...நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..!

ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் தொடரும் உயிரிழப்பு...நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆன்லைன் கேம் மற்றும்  லாட்டரியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் கேம்:

ஆன்லைனில் ரம்மி விளையாடும் சில நபர்கள் அதற்கு அடிமையாகி பண இழப்பை பெரிதும் சந்தித்து வருகின்றனர். அதிலும் சிலர் பணத்தை இழப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து உயிரை மாய்த்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி கேம்  தடை செய்யப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து தற்கொலையானது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுதும் ரம்மியால் ஒரு தற்கொலையானது நிகழ்ந்துள்ளது.

ஆன்லைன் ரம்மிக்கு அடிமை:

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரபு. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பிரபு ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்ததோடு, அதற்கு அடிமையும் ஆகியுள்ளார். 

பணம் இழப்பு:

ஆன்லைன் ரம்மியில் அடிமையாகியதால் தொடர் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் சுமார் 15 லட்சத்திற்கும் மேல் பணத்தை பிரபு இழந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கேரளா லாட்டரியில் ரூ 3 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்துள்ளார். 

தற்கொலை:

ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட தொடர் பண இழப்பால்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய பிரபு அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.