மின்சாரம் தாக்கி இளைஞர், முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு ... அரசு வேலை வழங்க கோரி சாலை மறியல் 

சீர்காழியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மின்சாரம் தாக்கி இளைஞர், முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு ... அரசு வேலை வழங்க கோரி சாலை மறியல் 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி குளங்கரை பகுதியில் மின்சார ஒயர் ஒன்று அறுந்து விழுந்துள்ளது. இதனை பார்க்கமால் சிங்காரவேல் என்ற முதியவர் அவ்வழியாக சைக்கிளில் சென்ற போது அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை அரவிந்தன் என்ற இளைஞர் காப்பாற்ற முயன்றுள்ளார்.

இதில் இருவரும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இறந்த இளைஞரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.   இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் மின்சார வாரியத்தில் வேலைக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இதனிடையே சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது பெருந்தோட்டம் செல்ல வேண்டிய அரசு பேருந்து பழுதாகி நின்றது. இதையடுத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் பேருந்தை சிறிது தூரம் தள்ளி  விட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.