” சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பெண்கள் குரல் போதிய அளவு ஒலிக்கவில்லை” - கனிமொழி எம்.பி.

” சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பெண்கள் குரல் போதிய அளவு ஒலிக்கவில்லை” - கனிமொழி எம்.பி.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் பெண்கள் பிரிவின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர் கூறியதாவது:- 

" ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் கொண்ட மேடையில் அமர்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கான கேன்சர் நோய் தடுப்பு முகாமை இயக்கத்தின் சார்பில் அமைக்க உள்ளனர். ஒரு காலத்தில் பெண்கள் கதவை திறந்து கூட வர முடியாத சூழல் இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. பெண்களை தடுத்து நிறுத்தும் கண்ணாடி கூரையினை உடைத்து முன்னேறும் நாட்கள் அருகாமையில் இருக்கின்றது , இந்த பாதையில் நம்முடன் துணையாய் நின்ற அனைவரையும் மறந்துவிடாமல் முன்னேறுவது தான் சிறந்தது. அது போலானது தான் திராவிட மாடல் அரசு.

இன்று பெண்களுக்கு சொத்தில் உரிமை உள்ளது என்று சட்டம் உள்ளது. ஆனால் அதற்காக எத்தனை பேர் போராடி அதை பெறுகின்றனர் என்பது கேள்விக்குறி,.. 

 பணியில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கையில் தமிழகம், உலகிலேயே முதலிடத்தில் இருக்கின்றது.  ஆனால் இந்திய மிகவும் பின்னடைந்து உள்ளது. 

தமிழ்நாட்டு பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். இருந்தாலும் எதோ ஒரு இடத்தில் இந்தியா இன்னும் பின்னடைவாக இருக்கிறது. பெண்களின் கனவுகளும் லட்சியமும் தான் முக்கியம்.  பெண்களும் அவர்களுடைய கனவுகளும் தான் அடுத்த தலைமுறைக்கு ஒரு பெரிய விஷயத்தை சொல்லி கொடுக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக போராடவும் கற்பிக்கவும் நாம் கல்வி புகட்ட வேண்டும். பெண்கள் உலகை ஆளும் நிலை வெகு விரைவில் வரும் அதற்கு என் வாழ்த்துக்கள்”,  என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி கூறியதாவது:- 

" சுதந்திரம் பெற்ற காலத்தில் சாத்தியமே இல்லை என்ற பல விஷயங்களை இன்று‌ நாம் சாதித்து வருகிறோம். ஜாதி அடுக்குகளின் கீழ் அழுத்தப்பட்டவர்களாக இருந்தவர்கள் இன்று எத்தனையோ சாதனைகளை செய்து வருகின்றனர். இந்தியாவில் எத்தனையோ பெண் ஆளுமைகள் ஜனாதிபதிகளாகவும் முதலமைச்சராகவும் இருந்தபோதிலும் போதுமான அளவு நாடாளுமன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் அவர்கள் குரல்கள் ஒலிக்கவில்லை. 

பெண்கள் குரல் ஒலிக்க சட்ட மசோதா கொண்டு வர வேண்டும். பெண்கள் பாராளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இட ஒதுக்கீட்டை பெறக்கூடிய வகையில் காலம் மாறும். 33 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கட்டை கொண்டு வர வேண்டும்.

அந்த வகையில் சம உரிமைகளை பெற்று அனைத்து துறைகளிலும்  பெண்கள் சாதிக்கக்கூடிய நாள் மிக விரைவில் வரும். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் அவரைப் போலவே, தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் பெண்கள் தொழில் முனைவோருக்கான பல திட்டங்களை வகுத்ததோடு அதற்கென்று தனி பட்ஜெட்டையும் ஒதுக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பெண்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக பல்வேறு திட்டங்களையும் முதலமைச்சராக அறிவித்திருக்கிறார்”,  என்றார்.

இதையும் படிக்க    | "பில்கிஸ் பானு வழக்கை இனியும் ஒத்திவைக்க முடியாது ; இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் கெடு..!