பெல்ட் ஏரியாவுக்கு பட்டா வழங்க புதிய சட்டம் இயற்றப்படுமா?

பெல்ட் ஏரியாவுக்கு பட்டா வழங்க புதிய சட்டம் இயற்றப்படுமா?

சென்னை மாநகராட்சியை சுற்றியுள்ள பெல்ட் ஏரியா பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவதில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி, சென்னை மாநகராட்சியை சுற்றியுள்ள 32 கிலோமீட்டர் வரை பெல்ட் ஏரியாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்படுவதில்லை. எனவே, பெல்ட் ஏரியா என்கின்ற அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது புதிதாக சட்ட விதிகளை உருவாக்கி பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  

இதையும் படிக்க : புதிய மாவட்டம் ஆகிறதா பழனி? பதிலளித்த அமைச்சர்...!

இதற்கு பதிலளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர். ராமச்சந்திரன், இந்த பெல்ட் ஏரியா என்பது அனைத்து மாநகராட்சிகளிலும் இருப்பதாகவும், அதேபோல் தான் சென்னையிலும் 32 கி.மீ வரை பெல்ட் ஏரியாவாக உள்ளது என்றும் தெரிவித்தார். எனவே, இப்பகுதிக்கு பட்டா வழங்குவது குறித்து அவசரமாக முடிவெடுக்க முடியாது என்றும், அதில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்றும் பதிலளித்தார்.