"சமூக நீதியை தமிழ்நாட்டிற்குள் தடுப்பது எது?" இராமதாசு கேள்வி!

ஒடிசா, கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியீட்டிற்கு தயாராகி உள்ள நிலையில்  அதனை தமிழ்நாட்டிற்குள் தடுப்பது எது? என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார். 

பிகார் மாநலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் விவரங்கள் கடந்த 2 ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஒரு மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதனை வெளியிட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில் பிகாருக்கு முன்னரே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய ஒடிசா மற்றும் கர்நாடகா போன்ற மாநில அரசுகளும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட உள்ளன. .


ஒடிசாவில்  கடந்த மே 1 முதல் ஜூலை 10 வரை நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் அம்மாநில அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதை விரைவில் வெளியிட இருப்பதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

அதேபோல், 2018-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையிலான புதிய அறிக்கையை கர்நாடக அரசிடம் நீதியரசர் ஜெயப்பிரகாஷ் ஹெக்டே தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அடுத்த மாதத்திற்குள்ளாக தாக்கல் செய்யும்; அதன்பின் அதன் விவரங்களும்  வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் இராமதாசு, சமூகநீதியைக் காப்பதற்கான ஒடிசா மற்றும் கர்நாடக அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என தெரிவித்துள்ளார்.  

மேலும் அவ்வறிக்கையில், சமூகநீதியின் தொட்டில் தமிழ்நாடு தான் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். சமூகநீதி வழங்குவதற்கான பல முன்முயற்சிகள் தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கியுள்ளன.  அதேபோல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துதல் என்ற சமூகநீதித் தென்றலும் தென் எல்லையான தமிழகத்திலிருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும்.  ஆனால்,  தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும்படி கடந்த 44 ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வரும் போதிலும், அதை செய்ய சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் அரசுகள் முன்வரவில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதை  ஒட்டுமொத்த இந்தியாவும்  வரவேற்கும் நிலையில், அதுகுறித்து தமிழக அரசோ, தமிழகத்தை ஆளும் திமுகவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த நிலைப்பாட்டையும்  எடுக்காதது  ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறியுள்ள அவர், சமூகநீதி சார்ந்து மிகப்பெரிய அச்சுறுத்தல்களை  எதிர்கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான் எனவும் கூறியுள்ளார். 

மேலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில்  69% இட ஒதுக்கீட்டை  உறுதி செய்ய வேண்டும் என்ற 2010-ஆம் ஆண்டு  உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக  பழைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில்  69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை? என்று  உச்சநீதிமன்றம் வினா எழுப்பினால் அதற்கு தமிழக அரசிடம் பதில் இல்லை. 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது  தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிக்க: ஏழாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரதம்!