ஜவுளி மற்றும் நகைக்கடைகளை திறப்பதற்கு அனுமதி... வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்...

தமிழகத்தில் ஜவுளி மற்றும் நகைக்கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

ஜவுளி மற்றும் நகைக்கடைகளை திறப்பதற்கு அனுமதி... வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தல்...
50 நாட்களாக மூடப்பட்டுள்ள ஜவுளி மற்றும் நகைக்கடை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமெனவும்,  பராமரிப்பு பணிக்காக வரும் 24ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை திறப்பதற்கு முதலில் அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா  தெரிவித்துள்ளார்.
 
கொரோனோ ஊரடங்கால் திறக்கப்படாமல் இருக்கும் ஜவுளி, தங்க நகை மொத்த வியாபாரிகள் கடைகளுக்கு அனுமதி வேண்டுமென்பது குறித்து ஆலோசிக்க ஜவுளி மற்றும் தங்க மொத்த வியாபாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை பாரிமுனையில் நடைபெற்றது. இதில் தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் கிலானி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.  
 
திருமணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அதற்கு தேவையான பட்டுப்புடவைகள், தங்க நகைகள் வாங்குவதற்கு தங்களது கடைகளை திறக்க வேண்டும். சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் அதனை நம்பியுள்ள 50 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டும்.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நகை, ஜவுளி, உணவகங்களின் கட்டிடங்களுக்கு சொத்து வரி, குடிநீர் வரி, போன்றவற்றை குறைந்தது ஆறு மாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும். மேலும் குறைந்தபட்ச மின் கட்டணம் வாங்க வேண்டும் என 9  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா,
 
அனைத்து கடைகளையும் திறந்தது போல் ஜவுளி மற்றும் தங்க மொத்த கடை, அடகு கடைகளையும் திறக்க வேண்டும். அதிகாரிகள் சாதாரணமாக கடைகளில் உள்ளே நுழைந்து 5 ஆயிரம் ரூபாய் வரை அபாரதம் விதிக்கிறார்கள். அவர்கள் முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 
 
கடை திறப்பதற்கு முன்பாக இரண்டு மாதமாக பராமரிப்பு பணிகள் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என்றார். இதுதொடர்பாக முதல் அமைச்சரை இன்று அல்லது நாளை சந்திக்க உள்ளேன் எனவும் விக்கிரமராஜா தெரிவித்தார்.