வைரமுத்துவின் "மகா கவிதை" அறிவுப் போட்டி- குவிந்த வாசகர்கள்

வைரமுத்துவின் "மகா கவிதை" அறிவுப் போட்டி- குவிந்த வாசகர்கள்

கவிப்பேரரசு வைரமுத்து அறிவித்துள்ள அறிவுசார் போட்டில் பலரும் கலந்துகொண்டு, தீவிரமாக விடைகளை எழுதி வருவதாக, அவர் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழில் ஏராளமான சிறுகதை, கவிதை தொகுப்பு, நாவல் எழுதிய வைரமுத்து, 2016-ல் "கொடிமரத்தின் வேர்கள்" மற்றும் 2019-ல் "தமிழாற்றுப்படை" நூல்களுக்கு பின், சில காலங்களாக புத்தககங்கள் அவ்வளவாக வெளியிடவில்லை. தற்போது நீண்ட நாளுக்கு பிறகு கவிதை தொகுப்பு விரைவில் வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார். தொடர்ந்து அந்த கவிதை தொகுப்பிற்கு ‘மகா கவிதை’ என தலைப்பிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு தனது X தளத்தில் வாசகர்களுக்கு புதிர் போட்டி ஒன்றை வைத்தார்.

அதாவது தனது ‘மகா கவிதை’ தலைப்பின் ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் ஓர் அர்த்தம் ஒளிந்திருப்பதாகவும், அதனை கண்டுபிடிக்கும் பட்சத்தில் ஒரு எழுத்துக்கு 1 லட்சம் வீதம், ஐந்து எழுத்துக்கும் மொத்தம் 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த போட்டிக்கு, பதில் எழுதுவதற்கு இறுதி நாள் நவம்பர் 30 ஆகும்.

இந்த அறிவுசார் போட்டியை முன்னிட்டு பலரும் பங்கேற்று, அவர் குறிப்பிட்ட  மின்னஞ்சலுக்கு, விடைகளை அனுப்பி வந்துள்ளனர்.  இந்நிலையில், தற்பொழுது அதனை நினைவுகூரும் விதத்தில் மீண்டும் ஒரு பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "கொட்டும் விடைகள் கொட்டுகின்றன, உங்கள் தீவிரம் திகைக்க வைக்கிறது, காலம் இருக்கிறது, மேலும் எழுதுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பலரும், பதில் அனுப்புவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர்.