செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

செங்கல்பட்டில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில் உடனடியாக தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கொரோனாவில் இருந்து  மக்களை பாதுகாக்க  18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தடுப்பூசி  செலுத்தி கொள்ள  மக்கள் ஆர்வம் காட்டி வருவதனால் தமிழகத்தில்  உள்ள அனைத்து  மக்களுக்கும் தடுப்பூசி  செலுத்தும் முனைப்பில்   தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில்   செங்கல்பட்டு மாவட்டம் திருமணி கிராமத்தில்  மத்திய அரசின் கட்டுப்பாட்டில்  உள்ள தடுப்பூசி  தயாரிப்பு  நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

கடந்த 2012 ஆண்டு 750 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனம்  மத்திய அரசால் கட்டப்பட்டது. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டு  9 ஆண்டுகளாகியும்  இந்த நிறுவனம்  செயல்படாமல்  கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி  உற்பத்தியை தொடங்க வேண்டும் என பல்வேறு  தரப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆய்வு  செய்தார்.  மேலும் தடுப்பூசி  உற்பத்தியை தொடங்குவது குறித்து  அதிகாரிகளுடன்  முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில்கொரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாகத் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும், மத்திய அரசின் நிறுவனமான எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்திற்கு உற்பத்தியை தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.