திருச்சியில் சேவல் கண்காட்சி: தங்க செயின், பணம் பரிசு!

திருச்சியில் சேவல் கண்காட்சி: தங்க செயின், பணம் பரிசு!

திருச்சி: திருச்சியில் 3 வது ஆண்டாக பாரம்பரிய சேவல்கள் கிளி மூக்கு, விசிறி வால் சேவல் கண்காட்சி நேற்று நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஜல்லிக்கட்டு திருவிழா நடத்தப்படுவது போல பல கிராமங்களில் சேவல் சண்டையும் நடத்தப்படும். மேலும் கோயில் திருவிழாக்களிலும், தங்கள் வீட்டு விசேஷத்தின் போது இதனை நடத்தி வந்தனர். இதற்காகவே பயிற்சி பெற்ற கட்டுச்சேவல் எனப்படும் சண்டை சேவல்களை வளர்த்து வருகின்றனர். இந்த சேவல்கள் சந்தையிலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இதற்காக கண்காட்சி நடத்தப்பட்டு சேவல்கள் விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சியில் திருச்சி மாவட்ட கிளி மூக்கு விசிறிவால் சேவல் நலச்சங்கம் சார்பில், அழிவின் விளிம்பில் இருக்கும் இதுபோன்ற சேவல்களை பாதுகாக்கும் வகையில், 3 வது ஆண்டாக பாரம்பரிய சேவல்கள் கிளி மூக்கு, விசிறி வால் சேவல் கண்காட்சி நேற்று நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சேவல்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சியில் இடம்பெற்றன. பாரம்பரிய சேவல்களான இவற்றின் மூக்கு கிளி போல இருக்கும். இவற்றின் வால்கள் விசிறி போல நீண்டு காணப்படும். இது போன்ற பாரம்பரிய சேவல்களை காப்பாற்றும் நோக்கில் கடந்த இரு ஆண்டுகளாக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று நடந்த 3ம் ஆண்டு சேவல் கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட கிளி மூக்கு, விசிறி வால், கீரி, கொக்கு வெள்ளை, கருஞ்செவலை, நூலான், மயில் நூலான், மயில் பூதி, பொன்ரம் உள்ளிட்ட பல்வேறு சேவல்கள் பங்கேற்றன.

இந்த சேவல்களை வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் வந்திருந்தனர். குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.5லட்சம் வரை சேவல்கள் விற்பனையாகின. கண்காட்சியில் இடம் பெற்ற சேவல்களை காண வந்த பார்வையாளர்கள் சேவல்களில் இத்தனை ரகங்களா? என ஆச்சரியத்துடன் வியந்துள்ளனர்.

இந்த கண்காட்சியில் சேவல் வளர்ப்பில் தலை சிறந்த அனுபவம் பெற்றவர்கள் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். இது தவிர நீளமான வால் அமைப்பு, சேவலின் உயரம், நிறம், மூக்கு, தோற்றம், அழகு, உடலமைப்பு, எடை ஆகியவற்றின் அடிப்படையில் முதல் தரத்தில் தேர்வாகும் 5 சேவல்களுக்கு 4 கிராம் தங்கம், இரண்டாம் தரத்தில் தேர்வாகும் 10 சேவல்களுக்கு 2 கிராம் தங்கம், 3ம் தரத்தில் தேர்வாகும் 15 சேவல்களுக்கு ஒரு கிராம் தங்கம், 4ம் நேரத்தில் தேர்வாகும் 20 சேவல்களுக்கு டேபிள் ஃபேன் களும் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் ஒட்டுமொத்தமாக முதல் பரிசு பெறும் சேவலுக்கு இருசக்கர வாகனம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சேவல் கண்காட்சி நடத்துபவர்கள் கூறும்போது, நாட்டுக்கோழி விசிறிவால் சேவலுக்கு சேவல் காப்புரிமை வழங்குவதற்காக ஒரு குழு அமைத்து எடை, உயரம் வைத்து மதிப்பீடு செய்து வருகிறோம். தமிழக அரசு காப்புரிமை தருவதற்கு உதவி செய்ய வேண்டும் என கிளி மூக்கு விசிறிவால் சேவல் நல சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். 

வகை வகையான சேவல்களை ஒரே இடத்தில் கண்ட சேவல் பிரியர்கள் ஆர்வமுடன் அனைத்துச் சேவைகளையும் பார்வையிட்டதும், சேவல்களை புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

இதையும் படிக்க: கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!