இன்று 16-வது மெகா தடுப்பூசி முகாம்... 2-வது தவணை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை...

தமிழகம் முழுவதும் இன்று 16-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.  காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இன்று 16-வது மெகா தடுப்பூசி முகாம்... 2-வது தவணை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை...

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.

அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரை 15 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 16-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 600 இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.