44 வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இளம் செஸ் வீரர்...! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய பள்ளி...!

44 வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இளம் செஸ் வீரர்...! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய பள்ளி...!

சென்னை சேர்ந்த இளம் செஸ் வீரரான குகேஷ் தனது 13வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். அதேபோல் 9 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப், 12 வயதுக்குட்பட்டோருக்கான  உலக சாம்பியன்ஷிப் இரண்டிலும் இவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஆசிய செஸ் தொடர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சர்வதேச அளவில் 5 தங்க பதக்கங்களை பெற்றுள்ளார்.

அதேபோல் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையை பெற்று தந்த இளம் செஸ் வீரர் குகேஷை ஊக்கப்படுத்தும் வகையில் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா அனேக்ஸ்சர் பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் செஸ் ஜாம்பவான் விஷ்வநாதன் ஆனந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது பேசிய விஷ்வநாதன் ஆனந்த், இளம் வீரர் குகேஷ் தனது ஆட்டத்தில் மட்டும் கவனமாக இருந்தது அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது என்றும் தான் பார்த்த வரையில் தனக்கு எதிரே விளையாடும் வீரர் யார் என்பதைப் பற்றி குகேஷ் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. இதுவே அவர் வெற்றிப்பெற முக்கிய காரணம் என்றும் புகழாரம் சூட்டினார்.

இதனைதொடர்ந்து பேசிய, குகேஷ் பள்ளிக்கு வராமல் இருப்பது நண்பர்களை இழப்பதாகவும் ஆனால் செஸ் விளையாட்டு தனது குறிக்கோளாக உள்ளதால் முழுவதுமாக செஸ் விளையாட்டில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார். மேலும் தற்போது 25வது இடத்தில் உள்ள தான், தனக்கு முன்னே உள்ள அனைவரிடமும் போட்டியிட்டு வெற்றிபெற்று முதலிடம் வகிக்க வேண்டும் எனவும், உலகின் தலை சிறந்த வீரரான மேக்னஸ் கார்ல்சனிடம் பல முறை போட்டியிட்டு வெற்றியும் ,தோல்வியும் அடைந்துள்ளேன், ஆனால் அவரிடம் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற வேண்டும் என்பது தனது ஆசை எனவும் குகேஷ் கூறியுள்ளார். முன்னதாக இளம் வயதில்  சாதனை புரிந்த குகேஷுக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுக்கான காசோலையை விஸ்வநாதன் ஆனந்த் வழங்கி கௌரவித்தார்.


இதையும் படிக்க : தொழிலதிபர் வீட்டில் கொள்ளை சம்பவம்...! இருவர் கைது...!