உயிருடன் இருக்கும் தந்தையை இறந்துவிட்டதாக கூறி இரண்டரை கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்த மகன்...

தந்தை இறந்துவிட்டதாக கூறி போலி சான்றிதழ் பெற்று சொத்தை அபகரித்தது மட்டுமல்லாமல், உயிருடன் இருக்கும் தந்தையை தீர்த்துக்கட்ட மகன் சதித் திட்டம் தீட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிருடன் இருக்கும் தந்தையை இறந்துவிட்டதாக கூறி இரண்டரை கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்த மகன்...

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அண்ணாமலை பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி சுசீலா இவர்களுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அண்ணாமலை பட்டி கிராமத்தில் முருகேசனுக்கு இரண்டு வீடுகள் உள்ளது. இந்த வீடுகளை தங்கள் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுக்குமாறு அவருடைய மூத்த மகன் சதாசிவம் கேட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் கடந்த 2019- ஆம் ஆண்டு முருகேசன் வீட்டிலிருந்து வெளியேறி யாருக்கும் தெரியாமல் வேறு பகுதிக்கு சென்று உள்ளார். பின்னர் சிறிது காலம் கழித்து ஊருக்கு வந்த முருகேசன் கம்பைநல்லூரில் உள்ள வங்கியில் பணத்தை எடுக்கச் சென்றுள்ளார் அப்போது அவர் இறந்துவிட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் கொடுத்து, வங்கியில் இருந்த  பணத்தை அவருடைய மகன் எடுத்துச் சென்றது தெரியவந்தது

மேலும் அவருடைய இரண்டரை கோடி மதிப்பிலான சொத்துக்களையும் இறப்பு சான்றிதழ் கொடுத்து அபகரித்து உள்ளதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் இது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார்.

ஆனால் அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.  இதனால் தனது மகனால், உயிருக்கு ஆபத்து என கருதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே இருந்த கிராமத்தில்  முருகேசன் தஞ்சம் அடைந்துள்ளார்.

மேலும் இவர் இருக்கும் இருப்பிடம் தெரிந்து அவருடைய மகன் சதாசிவம், தந்தையை கொலை செய்ய அடியாட்கள் அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இதை தெரிந்து கொண்ட  முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடி சென்று, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு கூட்டத்தில், உயிருடன் இருக்கும் தன்னை இறந்துவிட்டதாக கூறி,

போலிசான்றிதழ் பெற்று, தனது சொத்தை மகன் சதாசிவம் அபகரித்துவிட்டதாகவும், தனது சொத்தை மீட்டுத்தரக் கோரியும், மகனால் தன் உயிருக்கு ஆபத்து உள்ளது ஆகையால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.