100 டிகிரியை தாண்டிய வெயில்...!  பொதுமக்கள் அவதி...!!

100 டிகிரியை தாண்டிய வெயில்...!  பொதுமக்கள் அவதி...!!

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் தொடங்கி பல இடங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தாண்டு கோடைக் காலம் மோசமாக இருக்கும் என்றும் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

அதன்படி வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிகரித்தே வருகிறது. கடந்த மார்ச் மாதமே தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டிய நிலையில் ஏப்ரல் மாதத்திலும் பல இடங்களில் கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து பரமத்தி வேலூரில் 105.44 என்றும் சேலத்தில் 105.08 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் வேலூர், திருப்பத்தூர், மதுரை நகர் பகுதியில் 103.64 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.  திருச்சியில் 103.46 டிகிரியும், நாமக்கல், திருத்தணியில் தலா 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. தருமபுரி, மதுரை விமான நிலையத்தில் தலா 102.2 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் 102 டிகிரியும், கோவையில் 101.3 டிகிரியும், தஞ்சையில் 100.4 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்ப நிலை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.