இருசக்கர ஊர்திகளுக்கான சாலைவரியை உயர்த்த முடிவா? மாநில அரசு திட்டத்தைக் கைவிட வேண்டும்!

இருசக்கர ஊர்திகளுக்கான சாலைவரியை உயர்த்த முடிவா? மாநில அரசு திட்டத்தைக் கைவிட வேண்டும்!

இருசக்கர ஊர்திகளுக்கான சாலை வரியை உயர்த்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இருசக்கர ஊர்திகளுக்கான சாலை வரியை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அன்புமணி, தமிழ்நாட்டில் இரு சக்கர ஊர்திகளுக்கான சாலைவரியை இப்போதுள்ள 8 விழுக்காட்டிலிருந்து  10 விழுக்காடாகவும், மற்ற ஊர்திகளுக்கு 12 விழுக்காடாகவும் உயர்த்த தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

சாலைவரி உயர்வால் இரு சக்கர ஊர்திகளின் விலை ரூ.16 ஆயிரம் வரையிலும், மகிழுந்துகளின் விலை லட்சக்கணக்கிலும் உயரும் வாய்ப்பு உள்ளது. சராசரியாக 5% அளவுக்கு விலை உயர்வு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சாலை வரிகள் மூலமான தமிழக அரசின் ஆண்டு வருவாய் இப்போதுள்ள ரூ.6674 கோடியிலிருந்து ரூ.1000 கோடி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை...மழையால் முறிந்து விழுந்த ராட்சத மரம்...!

தொடர்ந்து, சாலைவரிகளை எந்தக் காலத்திலும் உயர்த்த வேண்டிய தேவை இல்லை.  சாலை வரி விழுக்காடு அளவில் தான் வசூலிக்கப்படுகிறது என்பதால், மகிழுந்துகளின் விலை உயரும் போதும், எண்ணிக்கை அதிகரிக்கும் போதும்  அரசின் வருமானம் தானாகவே உயரும் என்று குறிப்பிட்டவர், 2011-12ஆம் ஆண்டில் ரூ.3210.39 கோடியாக இருந்த ஊர்தி வரி வருவாய், 2022-23ஆம் ஆண்டில் ரூ.6674 கோடியாக, அதாவது 108 விழுக்காடு  அதிகரித்திருக்கிறது என்று எடுத்துக்காட்டுடன் விளக்கியுள்ளார்.

மேலும், ஊர்தி வரி வருவாய் இயல்பாகவே ஆண்டுக்கு 10% அதிகரித்து வரும் நிலையில், வரி உயர்வு தேவையா என்று கேள்வி எழுப்பியவர், ஊர்திகளுக்கான சாலைவரியை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.