கோயில் திருப்பணி என கூறி போலி ரசீது அச்சடித்து பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த கும்பல்...

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் கோயில் திருப்பணி என போலி ரசீது அச்சடித்து கூகுள் பே மூலம் நன்கொடை வசூலித்த மோசடி கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோயில் திருப்பணி என கூறி  போலி ரசீது அச்சடித்து பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த கும்பல்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து பண்டிகை, கிறிஸ்தவ பண்டிகை மற்றும் முக்கிய திருவிழா காலங்களை குறிவைத்து மத அடையாளங்களை பயன்படுத்தி களமிறங்கும் கும்பல்கள் போலி ரசீதுகளை அச்சடித்து வீடு வீடாக சென்று முதியோர் இல்லத்திற்கு நன்கொடை, அனாதை இல்லத்திற்கு நன்கொடை என பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் இரணியல் பகுதியில் நெற்றியில் குங்கும பொட்டுடன் சொகுசு காரில் வந்திறங்கிய 5-பேர் கொண்ட கும்பல் அந்த தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று கேரளா மாநிலத்தில் உள்ள கோயில் ஒன்றில் திருப்பணி நடப்பதாக கூறி ரசீதுடன் நன்கொடை வசூலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த அப்பகுதி இளைஞர்கள் அந்த கும்பலை சுற்றி வளைத்த போது 3-பேர் சொகுசு காரில் தப்பியோடிய நிலையில், இரண்டு பேரை இளைஞர்கள் பிடித்து விசாரித்துள்ளனர். அதில் அவர்கள் கேரள மாநிலம் பாறசாலை பகுதியை சேர்ந்த பெர்னாடு மற்றும் கணேஷ் என்பதும் அவர்கள் சொன்னது போல் ஒரு  கோயிலே இல்லாத நிலையில் திருப்பணி நன்கொடை என்ற பெயரில் போலியாக நோட்டீஸ் மற்றும் நன்கொடை ரசீது அச்சடித்து ஊர் ஊராக சென்று போலி ரசீதை வழங்கி கூகுள் பே மற்றும் நேரடியாகவும் பணம் வசூலித்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து பிடிபட்ட இருவரையும், இளைஞர்கள் இரணியல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.