கறிக்கடைக்குள் புகுந்து கோழி திருடிய காவலர்...  3 காவலர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு...

கோழி திருடியதை வெளியே சொல்லி விட்டதாக கடைக்காரர் மீது தாக்குதல்

கறிக்கடைக்குள் புகுந்து கோழி திருடிய காவலர்...  3 காவலர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல் குடியில்  முத்துசெல்வன் என்பவருக்கு சொந்தமான கறிக்கோழி கடை உள்ளது. இதன் அருகே காடல்குடி காவல் நிலையம் அமைந்துள்ளது. 

கடந்த 16ம் தேதி நள்ளிரவு கறிக்கோழி சாப்பிட ஆசைப்பட்ட அந்த காவல் நிலைய தலைமை காவலரான பாலகிருஷ்ணன் என்பவர், காவல் நிலையத்திலிருந்து முத்து செல்வனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவர் தூங்கிவிடவே, அந்த அழைப்பினை அவரது மனைவியான ஜெயா எடுத்து பேசியுள்ளார்.

அப்போது காவல் நிலையத்திற்கு உடனடியாக ஒரு கிலோ கறிக்கோழி அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டதாக தெரிகிறது. ஆனால் ஜெயாவோ, தற்போது முடியாது, காலை கொண்டு வருவதாக கூறி, அழைப்பை துண்டித்து விட்டு உறங்கி விட்டார். 

இதனிடையே மறுநாள் மீண்டும் முத்துச்செல்வனை தொடர்பு கொண்ட அந்த காவல் நிலைய தலைமை காவலரான பாலகிருஷ்ணன், அவரது கடையிலிருந்து ஒரு கோழியை நள்ளிரவு திருடியதாக கூறியுள்ளார். மேலும் அதற்கான தொகையை வழங்குவதாக தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் முத்துசெல்வன் அதனை நிராகரித்துள்ளார்.

அதன்பின் மீண்டும் முத்துசெல்வனை தொந்தரவும் செய்யும் விதமாக காவலர்கள் பாலகிருஷ்ணன், சதீஷ்குமார் ஆகியோர் மீனுடன் கறிக்கோழி கடைக்கு வந்து மீனை வெட்டி தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் தனக்கு மீன் வெட்டத்தெரியாது என கூறி முத்துச்செல்வன் வெறும் கத்தியை மட்டும் வழங்கியதாக சொல்லப்படுகிறது. 

இதேபோல் அவ்வப்போது முத்துச்செல்வனை காவலர்கள் தொல்லை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று திடீரென கடைக்கு வந்த பாலகிருஷ்ணன், கோழி திருடியதை எதற்கு வெளியே சொன்னாய் என கூறி முத்துச்செல்வனிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் இதனால் தனக்கு பணிமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக சாடிய அவர், முத்துச்செல்வனை தாக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த ராமர் என்பவரும் முத்துச்செல்வனுக்கு ஆதரவாக பேசியுள்ளதாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், தனக்கு ஆதரவாக காவலர் சதீஷ்குமாரையும் வரவழைத்து தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் முத்துச்செல்வம் படுகாயமுற்றதாக கூறப்படுகிறது. கிராம மக்கள் கூடவே, அங்கு வந்த மற்றொரு தலைமை காவலர் பாலமுருகன் சக காவலர்களான பாலகிருஷ்ணன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரை அங்கிருந்து காரில் அழைத்து சென்றுள்ளார்.

 இதுகுறித்து முத்துச்செல்வன் அளித்த புகாரின் பேரில், காவலர்கள் பாலகிருஷ்ணன், சதீஷ்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஒரு கிலோ கறிக்கோழிக்கு ஆசைப்பட்டு, திருட்டு வழக்கில் போலீசார் சிக்கி கொண்டு, மீள முடியாமல் விழிபிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.